மணப்பாறையை வெளுத்து வாங்கிய கனமழை; வீடுகளில் மழைநீர் புகுந்தது

0 385
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தாலும் கூட இரவு நேரத்தில் மழை கொட்டி தீர்த்தது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் பெய்த கன மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. இந்நிலையில் ராஜீவ் நகர் பகுதியில் உள்ள அப்பு அய்யர் குளத்தின் ஒரு பகுதியில் கரை உடைப்பு ஏற்பட்டு மழைநீர் காட்டாற்று வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடத் துவங்கியது. ராஜீவ் நகர், இந்திராநகர் சேது ரெத்தினபுரம், முத்தன் தெரு, பஸ் நிலையம் என பல்வேறு பகுதிகளிலும் நோக்கி சென்ற மழைநீரால் சுமார் 300க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்து கொண்டது.

இரவு நேரத்தில் திடீரென காட்டாற்று வெள்ளம் வீட்டிற்கு வருவதை அறிந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தனர். சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக இந்த நிலை நீடித்த நிலையில் நள்ளிரவுக்குப் பின் நீர் வடிய தொடங்கியது இருப்பினும் வீடுகளுக்குள் தேங்கியிருந்த மழை நீரை பொதுமக்கள் அப்புறப்படுத்தினர். சாலைகளிலும் சுமார் 3 அடி உயரம் வரை நீர் சென்றதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு நகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து முழுமையாக தடைபட்டு நின்றது.

பஸ் நிலையம் முன்பு குளம் போல் திரண்டிருந்த மழை நீரால் பல்வேறு வாகனங்கள் பழுதாகி பாதியிலேயே நின்று கொண்டது. இதுமட்டுமின்றி வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிய நினைத்தவர்கள் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய நீரால் வீட்டிற்கு செல்ல முடியாமல் நள்ளிரவு நேரத்திற்கு பிறகு வரை சாலை ஓரங்களில் ஓரிடத்தில் காத்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இது ஒருபுறமிருக்க நீண்ட ஆண்டுகளுக்குப் பின் பெருக்கெடுத்து ஓடிய மழை நீரை பார்க்க பலரும் சாலையில் வந்து நின்றனர். இதேபோல் தியேட்டருக்கும் மழை நீர் புகுந்ததால் அந்த நீரை வெளியேற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.