மாவட்ட தொழில் மையம் சார்பில் ஏற்றுமதியாளர்களுக்கான கருத்துப்பட்டறை
சுதந்திரம் பெற்று 75-வது ஆண்டை கொண்டாடும் விதமாக வெளிநாட்டு வணிக இயக்குனரகம் மற்றும் மாவட்ட தொழில் மையம் சார்பில் ஏற்றுமதியாளர்களுக்கான கருத்துப்பட்டறை திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

கலெக்டர் சிவராசு தலைமை தாங்கி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மானியங்கள் மற்றும் சலுகைகள் குறித்த திட்ட விளக்க கையேட்டினை வெளியிட்டார். மேலும் அவர், தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டத்தின் மூலம் புதிய தொழில்முனைவோர் 5 பேருக்கு ரூ.16 லட்சத்து 68 ஆயிரத்து 570 மானியத்தொகையை வழங்கினார்.

முன்னதாக பல்வகை தொழில் உற்பத்தி பொருட்களின் கண்காட்சியை கலெக்டர் தொடங்கி வைத்து பார்வையிட்டார். கூட்டத்தில் பங்கேற்ற அலுவலர்கள் தங்கள் துறை சார்ந்த திட்டங்களை எடுத்துரைத்தனர்.

இதில் மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் ரவீந்திரன், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழக மண்டல மேலாளர் சுசில்குமார், நபார்டு மாவட்ட வளர்ச்சி மேலாளர் மோகன் கார்த்திக், துணை இயக்குனர் சரவணன், டிடிட்சியா தலைவர் ராஜப்பா, பெல்சியா தலைவர் ராஜப்பா ராஜ்குமார், தேசிய வாழை ஆராய்ச்சி மைய முதன்மை விஞ்ஞானி குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.