குட்கா, புகையிலை பொருள்கள் விற்பனை : இருவர் கைது
திருச்சி டிச.1- திருச்சி கிராப்பட்டி பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் கிடைத்தது .உடனடியாக அவர் அங்கு விரைந்து சென்று பெட்டிக்கடையில் சோதனை நடத்திய போது தடை செய்யப்பட்ட 5.394 கிலோகிராம் எடை கொண்ட ஹான்ஸ், கூலிப் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் புகையிலைப் பொருட்களை கைப்பற்றிய அதிகாரிகள் இது தொடர்பாக எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் .அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெட்டிக்கடை உரிமையாளர் கிராப்பட்டி மதுரை மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த முனுசாமி ( 59 ) என்பவரை கைது செய்தனர்.
இதே போன்று பாலக்கரை துரைசாமிபுரத்தில் ஹான்ஸ் புகையிலை பதுக்கி வைத்திருந்த துரைசாமிபுரம் தனமணி காலனி பகுதியைச் சேர்ந்த கரீம் ( 19 )என்ற இளைஞரை பாலக்கரை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குமார் கைது செய்தார்.