ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பக்தர்களின் செல்போன்களை பாதுகாக்க பெட்டகங்கள் தயார்
திருச்சி, ஆக.20 ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பக்தர்களின் செல்போன்களை பாதுகாக்க பெட்டகங்கள் தயாராக உள்ளது. இதற்காக 3 கோபுர வாசல்களிலும் கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தின் முக்கிய கோவில்களில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந்தேதி முதல் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. குறிப்பாக, கோவில்களின் புனித தன்மையை பேணவும், செல்போன் மூலம் புகைப்படம் மற்றும் ரீல்ஸ் எடுப்பதை தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் செல்போன்களை பாதுகாப்பதற்காக 3 கோபுர வாசல்களில் சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது:-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்குள் வருகிற 1-ந்தேதி முதல் பக்தர்கள் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படாது. இதற்காக, ஸ்ரீரங்கம் தெற்கு கோபுர வாசல், வடக்கு வாசல், கிழக்கு வாசல் என 3 இடங்களில் சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், தெற்கு கோபுர வாசல் பகுதியில் காலணிகள் பாதுகாக்குமிடம் அருகில் உள்ள கவுண்ட்டரில், வங்கி லாக்கர் போன்று 2 ஆயிரம் பெட்டகங்கள் உள்ளன. இதில், ஒரே குழுவாக வந்தால் ஒரு பெட்டகத்துக்கு 5 செல்போன்கள் வரை வைத்துக்கொள்ளலாம். இதேபோல வடக்கு, கிழக்கு வாசல்களில் தலா 500 பெட்டகங்கள் கொண்ட செல்போன் வைப்பறைகள் தயார் நிலையில் உள்ளன. மொத்தம் 3 ஆயிரம் பெட்டகங்களில் ஒரே நேரத்தில் அதிகபட்சம் 15 ஆயிரம் செல்போன்கள் வரை வைக்க முடியும். இதற்காக ஒரு செல்போனுக்கு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படும். கோவிலுக்கு வரும் பக்தர்கள் முடிந்த அளவுக்கு தங்களது செல்போன்களை வீட்டிலோ அல்லது வாகனத்திலோ பத்திரமாக வைத்து விட்டு வந்தால், கோவில் பணியாளர்களின் பணிச்சுமையும், கோவில் பக்தர்கள் வரிசையில் காத்திருக்கும் நேரமும் குறையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
பக்தர்கள் தங்களது செல்போன்களை வழங்கும்போதும், திரும்ப பெற்றுக்கொள்ளும்போதும் எவ்வித குளறுபடியும் ஏற்படாத வகையில் தனி சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் செல்போன் வழங்குபவர்களின் முகம் உள்ளிட்ட தனித்துவ அடையாளங்கள் பதிவு செய்யப்படும். வருகிற 25-ந் தேதி முதல் சோதனை அடிப்படையில் இந்த சாப்ட்வேர் பரிசோதனை செய்யப்படும் என கோவில் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.