திருச்சி ஸ்ரீரங்கம் அருகில் உள்ள பொண்ணுரங்கபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பரதன் மகன் அனிஷ்(வயது 33). சொந்த ஊர் கேரளா மாநிலம். இவர் பொண்ணுங்கபுரத்தில் தங்கி, அதே பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி அன்னபூரணி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் வேலை விஷயமாக மாம்பழச்சாலை பகுதிக்கு வந்து விட்டு, மீண்டும் வீட்டிற்கு செல்லும் வழியில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றபோது அவரது வலதுபுறம் ஒரு டாரஸ் லாரி சென்றுள்ளது. இடதுபுறம் ரோட்டில் வந்த ஒரு மாடு இவர் மீது திடீரென மோதியதில் நிலை தடுமாறிக் கீழே விழுந்துள்ளார்.
அப்போது அருகே வந்த டாரஸ் லாரியின் பின்பக்க டயர் அனீஷ் தலையில் ஏறி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவலறிந்த வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் அனீசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.