திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராவ். இவர் திருச்சி-கரூர் பைபாஸ் ரோட்டில் டீக்கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு இவர் வழக்கம் போல் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது, கஞ்சா போதையில் அங்கு வந்த 2 வாலிபர்கள், கடையில் இருந்த கேசியரிடம் பணம் கேட்டு தகராறு செய்தனர்.
அவர் பணம் கொடுக்க மறுக்கவே, ஆத்திரம் அடைந்த 2 வாலிபர்களும் பிஸ்கெட் உள்ளிட்ட திண்பண்டங்கள் இருந்த கண்ணாடி பாட்டில்களை உடைத்து ரகளை செய்தனர். இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள், அவர்கள் 2 பேரையும் பிடித்து அங்கிருந்த இரும்பு கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த உறையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததில் இருவரும் படுகாயம் அடைந்ததால், அவர்களை மீட்டச சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடிகளான அவர்கள் இருவரும் திருட்டு, வழிப்பறி வழக்கில் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.