மாநகராட்சி ஊழியர்கள் மீது பா.ஜ.க.வினர் போலீசில் புகார்
திருச்சி மாநகர கண்டோன்மெண்ட் மண்டல தலைவர் பரமசிவம் தலைமையிலான பா.ஜனதா கட்சியினர் திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ்நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த புகார் மனுவில், ராணுவ இடத்தில் அனுமதி பெற்றுக்கொடுத்த மத்திய அரசையும், பாரத பிரதமர் மோடி மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து எங்கள் கட்சி சார்பில் கடந்த 15-ந் தேதி காலையில் ரெயில்வே ஜங்ஷன் மேம்பாலம் அருகில் விளம்பர பதாகை வைத்திருந்தோம்.
அதை மாநகராட்சி ஊழியர்கள் கிழித்து சேதப்படுத்தி உள்ளனர். அதன் அருகே காங்கிரஸ், தி.மு.க. சார்பில் வைத்துள்ள விளம்பர பதாகைகள் அப்படியே உள்ளன. எங்களுக்கு தகவல் தெரிவிக்காமல் நாங்கள் வைத்த விளம்பர பதாகையை கிழித்து சேதப்படுத்திய மாநகராட்சி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.