மணப்பாறையில் காவல் நிலையத்தில் கர்ப்பிணி பெண் காவலருக்கு வளைகாப்பு நடத்திய போலீசார்!
திருச்சி மாவட்டம், மணப்பாறை காவல் நிலையத்தில் மட்டப்பாறைபட்டியைச் சேர்ந்த கோபி என்பவரது மனைவி திவ்யா வயது 25 என்பவர் காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கர்ப்பிணியான பெண் காவலருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி போலீஸ் நிலையத்தில் இன்று நடைபெற்றது. மணப்பாறை டிஎஸ்பி ஜனனிபிரியா, வட்டாட்சியர் சேக்கிழார், காவல் ஆய்வாளர் கருணாகரன் உள்பட காவல்துறையினர் மற்றும் திவ்யாவின் உறவினர்கள் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்ணிற்கு வளையல் அணிவித்தும் தம்பதியினருக்கு சந்தனம் பூசி நெற்றித்திலகமிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து ஆசிர்வதித்தனர்.

இதையடுத்து அனைவருக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. நிகழ்வில் பல்வேறு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். புகார் மனுக்கள் விசாரணை செய்யப்பட்டு வந்த காவல்நிலையத்தில் வளைகாப்பு விழா நடைபெற்றதை காவல்நிலையத்திற்கு வந்த பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் வியந்து பார்த்துச்சென்றனர்.