பலத்த மழையால் முக்கொம்பு மேலணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு; காவிரியில் 10,000 கனஅடி தண்ணீர் திறப்பு

0 469
Stalin trichy visit

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. மேலும், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வுமண்டலமாக மாறியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம்இரவு முதல் விடிய, விடிய மழை பெய்து வந்தநிலையில், நேற்று காலையும் வானம் மேக மூட்டமாக இருந்தது. பகல் பொழுதில் அவ்வப்போது விட்டு, விட்டு சாரல் மழை பெய்தது. இடைவிடாது பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. ஒரு சில பகுதிகளில் குடியுருப்புகளை சுற்றி தேங்கிய மழைநீர் வடியாமல் இருப்பதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.

மழையின் தாக்கம் காரணமாக திருச்சி மாவட்டத்தில் நேற்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டது. மேலும், மாவட்டத்தில் ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன. கும்பக்குடி ஏரியில் மழைநீர் நிறைந்துள்ளதை மாவட்ட கலெக்டர் சிவராசு பார்வையிட்டு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து திருவெறும்பூர் கார்மெல்கார்டன் வசந்தம்நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளை சுற்றி தேங்கிய நீரை அப்புறப்படுத்தவும், மீட்பு நடவடிக்கைளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அப்போது மாநகராட்சி ஆணையர் முஜிபுர்ரகுமான் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

மேலும், பலத்த மழை காரணமாக கரூர் மாவட்டம் மாயனூரில் இருந்து காவிரி ஆற்றில் முக்கொம்பு மேலணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. முக்கொம்பு மேலணைக்கு வரும் தண்ணீர் 2 ஆக பிரிக்கப்பட்டு கொள்ளிடம், காவிரி ஆறுகளில் திறந்து விடப்படுகிறது. இதில் கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 40 ஆயிரத்து 212 கனஅடியும், காவிரியில் டெல்டா பாசனத்துக்காக 10 ஆயிரத்து 695 கனஅடியும் என ஆக மொத்தம் 50 ஆயிரத்து 907 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கொள்ளிடம் மற்றும் காவிரியில் அதிகஅளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றில் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் காவிரி மற்றும் கொள்ளிடக்கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமயைினை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறிதது அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடந்து. திருச்சி மாவட்டத்துக்கான வடகிழக்கு பருவமழை கண்காணிப்பு அலுவலரும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையருமான ஜெ.ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் சிவராசு மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

திருச்சி மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
கல்லக்குடி-33.40, லால்குடி-32, நந்தியாறுதலை-42.40, புள்ளம்பாடி-34.20, தேவிமங்கலம்-54, சமயபுரம்-53.40, சிறுகுடி-17, வாத்தலைஅணைக்கட்டு-34.40, மணப்பாறை-5, பொன்னையாறுஅணை- 2, கோவில்பட்டி-3.20, மருங்காபுரி-4.20, முசிறி-19, புலிவலம்-10, தாத்தையங்கார்பேட்டை-26, நவலூர்குட்டப்பட்டு-13.60, துவாக்குடி-59, கொப்பம்பட்டி- 42, தென்பரநாடு-45, துறையூர்-24, பொன்மலை-30.8, விமானநிலையம்-28.5, ஜங்ஷன்-22, திருச்சி டவுன்-29. திருச்சி மாவட்டத்தில் ஒட்டு மொத்தமாக 664.10 மில்லிமீட்டரும், சராசரியாக 27.67 மில்லிமீட்டரும் மழை பதிவானது.

Leave A Reply

Your email address will not be published.