நிதிநிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுத்திடக் கோரி சாலை மறியல்
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் ஓம் ஶ்ரீ செந்தில் கணேஷ் என்ற தனியார் நிதிநிறுவனம் செயல்பட்டு வந்தது. மேலும் பல இடங்களில் இந்த நிதி நிறுவனம் இயங்கி வந்த நிலையில் மணப்பாறை, வையம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பணம் செலுத்தி சீட்டில் சேர்ந்தனர். இந்நிலையில் அந்த நிறுவனம் திடீரென மூடப்பட்டது. இதனால் பணம் கட்டியவர்கள் ஏமாற்றம் அடைந்ததுடன் கடும் மனவேதனை அடைந்து தினமும் பார்த்து வந்தனர்.
மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இதுதொடர்பாக வையம்பட்டி போலீசிலும் புகார் அளித்ததன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்தனர். அதன் பின்னர் சம்மந்தப்பட்ட நிதிநிறுவனம் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்கனவே பல போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் சம்மந்தப்பட்ட நிதிநிறுவனத்தை நடத்தியவர் சகஜமாக சுற்றி வரும் நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறி பணம் செலுத்தி ஏமார்ந்த மக்கள் போலீஸ் நிலையத்திற்கு சென்று முறையிட்டுள்ளனர். ஆனால் அங்கிருந்த போலீசார் முறையான பதில் சொல்லாமல் வெளியில் செல்லும்படி கூறியதாக தெரிகிறது.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் வையம்பட்டி – கருங்குளம் சாலையில் போலீஸ் நிலையம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆனால் போலீசார் கண்டுகொள்ளாத நிலையில் ஆத்திரமடைந்த மக்கள் திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்ட் ஜனனி பிரியா, இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் (துவரங்குறிச்சி) கருணாகரன் (மணப்பாறை) மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.