கம்பம் முழுவதும் சிக்னலின் நிறத்தை காட்டும் கம்பம்
திருச்சி மாநகரில் தலைமை தபால்நிலையம், ஒத்தக்கடை, புத்தூர் நால்ரோடு, டி.வி.எஸ்.டோல்கேட், மன்னார்புரம், வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானா உள்பட பல்வேறு முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து சிக்னல்கள் உள்ளன. இந்த சிக்னல்கள் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. சிகப்பு, மஞ்சள், பச்சை ஆகிய 3 வண்ணங்களில் மாறி, மாறி போக்குவரத்து சிக்னல்களை காட்டும். இந்த சிக்னல்களை கவனித்து வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்கி செல்வார்கள்.
திருச்சி மாநகரில் போக்குவரத்து சிக்னல்களில் நிற்கும் வாகன ஓட்டிகளின் மனஇறுக்கத்தை போக்கும் வகையில் கடந்த மாதம் 3-ந் தேதி முதல் ஒலிப்பெருக்கி மூலம் திரைப்பட பாடல்களின் இசை ஒலிப்பரப்பட்டு வருகிறது. மனஇறுக்கத்துடன் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சிக்னல்களுக்காக காத்து நிற்கும் சமயத்தில் திரை இசை பாடல் ஒலிப்பது மனதுக்கு இனிமையாக இருப்பதாக வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்து இருந்தனர்.
இந்தநிலையில் திருச்சி மாநகரில் உள்ள போக்குவரத்து சிக்னல்கள் தற்போது நவீன முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக சிகப்பு நிறம் வாகனத்தை நிறுத்த வேண்டும் என்பதற்கும், மஞ்சள் நிறம் புறப்பட தயாராக வேண்டும் என்பதையும், பச்சை நிறம் செல்லலாம் என்பதையும் குறிக்கும் விதிமுறையாக உள்ளது. இந்த 3 நிறங்களின் அலைநீளம் அதிகம் என்பதால் தொலைவில் இருந்து பார்த்தாலும் தெளிவாக தெரியும்.
ஆகையால் தான் உலகில் பெரும்பாலான நாடுகளில் இந்த 3 நிறங்களே போக்குவரத்து சிக்னல்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது திருச்சி மாநகரில் உள்ள சிக்னல்களில் சிகப்பு நிறத்தை காட்டும்போது, சிக்னல் கம்பத்தில் உள்ள குறிப்பிட்ட பகுதி மட்டுமே சிகப்பில் காட்டும். இனி, சிகப்பு நிறத்தில் சிக்னல் விழுந்தால் கம்பம் முழுவதுமே சிகப்பு நிறமாக மாறிவிடும் வகையில் எல்.இ.டி. கம்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதேபோல், பச்சை, மஞ்சள் நிறங்களில் சிக்னல் விழுந்தால் அதே நிறங்களில் கம்பம் முழுவதும் மாறிவிடும்.
முதல்கட்டமாக தனியார் பங்களிப்புடன் இந்த நவீன சிக்னல்கள் திருச்சி மன்னார்புரம் ரவுண்டானாவை சுற்றியுள்ள 14 சிக்னல் கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்களின் ஆதரவும், வரவேற்பும் இருக்கும் பட்சத்தில் மேலும் 5 சிக்னல்களில் பொருத்த போக்குவரத்து போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதுபோன்ற சிக்னல்கள் வாகன ஓட்டிகளுக்கு தெளிவாக தெரியும். மேலும், போக்குவரத்து விதிமுறை மீறல் தவிர்க்கப்படும். ஏற்கனவே மும்பை, சென்னை போன்ற பெருநகரங்களில் போக்குவரத்து சிக்னல்களில் இந்த முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது திருச்சியிலும் போக்குவரத்து சிக்னல்களில் இந்த முறை பயன்பாட்டுக்கு வந்துள்ளது.