லாரி மோதிய விபத்தில் கூலி தொழிலாளி உயிரிழப்பு
திருச்சி, ஆக.25 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் தாப்பாய் சாலையில் இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத லாரி மோதி விபத்தில் கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
புள்ளம்பாடி அருகே தாப்பாய் கிராமம் மதுரை வீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகன் 45 வயதான சேகர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. நேற்று இரவு புள்ளம்பாடியில் நடைபெற்ற வார சந்தையில் காய்கறிகள் வாங்கிவிட்டு பத்து மணி அளவில் புள்ளம்பாடி தாப்பாய் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத லாரி இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு தப்பி சென்றது. இதில் தடுமாறி கீழே விழுந்த சேகரை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இது குறித்து புகாரின் பேரில் கல்லக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய வாகனத்தை தேடி வருகின்றனர்.