ஓர் உயிர் ஜீவனுக்கும் பூங்கா – ஏசியாவே பிரமிக்கும் நம்ம ஊரு வண்ணத்துப்பூச்சி பூங்கா!

0 646
Stalin trichy visit

சென்னைக்கு மெரினா கடற்கரை எப்படியோ, திருச்சிக்கு காவிரி பாலமும், கல்லணையும், முக்கொம்பும் என்ற வரிசையில் தற்போது வண்ணத்துப்பூச்சி பூங்காவும் ஒரு முக்கிய இடமாக மாறிவருகிறது. விடுமுறை நாட்களில் குவியும் பொதுமக்கள், ஆசியாவிலேயே மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்கா, குட்டீஸ்களின் ஃபேவரைட் பிளேஸ், இயற்கையான சூழல், முக்கொம்பில் இருந்து பிரியும் காவிரிக்கும் கொள்ளிடத்திற்கு இடையில் எழில் கொஞ்சும் இடம் என அமைதியான சூழலில் உருவாக்கப்பட்டுள்ளது தான் இந்த வண்ணத்துப் பூச்சி பூங்கா.


ஆம், பூ பூவாக பறந்து போகும்… பட்டாம்பூச்சியைக் கண்டு ரசிக்காதவர்கள் இங்கே இருக்க முடியாது. அவை பறப்பது… நாம் ரசிப்பதற்காக அல்ல, நம்முடைய எதிர்காலத் தேவைக்கான உணவு உற்பத்திக்கு உதவி செய்யத்தான் அவை இருக்கின்றன.ரங்கோலி போல நேர்த்தியான வடிவங்களில் விதவிதமான கோலங்களை தன்னுடலில் சுமந்தபடி வட்டமடிக்கும் வண்ணத்துப்பூச்சிகள் தேனீக்களைப் போல மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பூச்சி ரகங்களில் ஒன்று.

ஓருயிர் ஜீவனுக்கும் உயிர் உள்ளதை எண்ணி ஆசியாவிலேயே மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்கா நம்முடைய திருச்சியில் அமைந்திருப்பது ஒட்டுமொத்த திருச்சி வாசிகளுக்கும் பெருமைதான். கடந்த 2013ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் திறக்கப்பட்ட பூங்கா இது. வண்ணத்துப்பூச்சிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அவற்றின் இனப்பெருக்கத்தை அதிகப்படுத்தவும் என ஆசியாவிலேயே மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்காவை திருச்சியில் தேர்வு செய்ததற்கு காரணம் பலவும் இருக்கின்றன.

திருச்சியின் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும், ஸ்ரீரங்கத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில், முக்கொம்பில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலும் மேலூருக்கு அடுத்து நடு காவிரி பகுதியில் அமைந்துள்ளது தான் இந்த வண்ணத்துப் பூச்சி பூங்கா. தற்போது முக்கொம்பில் இருந்து நேரடியாக வண்ணத்துப்பூச்சி பூங்காவிற்கு வருவதற்கான பால பணிகளும், சாலை பணிகளும் பொதுப்பணித் துறை சார்பாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

70% நிறைவடைந்த இந்த சாலை பணிகள் முழுமையாக நிறைவடைந்து விட்டால் ஹாயாக முக்கொம்பில் இருந்து வண்ணத்துப்பூச்சி பூங்காவிற்கு வரலாம். அப்படியே ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசித்து விட்டு நேராக கல்லணைக்கு புறப்படலாம் என்கிற ஒரு நிலை சமீபத்தில் உருவாக உள்ளது.

இந்த வண்ணத்துப் பூச்சி பூங்காவிற்கு திருச்சி மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் சுற்றுலா பயணிகள், மாணவர்கள், குழந்தைகள் என படையெடுத்த வண்ணம் தான் இருக்கின்றன. அங்கு எழில்கொஞ்சும் வண்ணத்துப்பூச்சி உருவங்களையும் மற்றும் பல இடங்களிலும் செல்பி மழையை எடுத்து‌ பொழிகின்றனர். பூங்காவின் கூடுதல் சிறப்பாக வண்ணத்துப்பூச்சிகள், முட்டையிடுதல், புழு வளருதல், தேன் குடித்தல் என அதன் வாழ்க்கைச் சக்கரத்துக்காக ஒவ்வொரு தாவரத்தையும் தேர்வுசெய்யும். அப்படி வரும் வண்ணத்துப்பூச்சிகள் வருகைக்காக, பூங்காவில் வண்ணத்துப்பூச்சிகளுக்கு மிகவும் பிடித்த சின்யா, பென்டாஸ், டிரைக்டரி, கொரட்டல் ஏரியா, கொன்றை, மேரி கோல்டு பூச்செடிகள், செண்பக மரம் மகிழம் மரம் எனச் சுமார் 300க்கும் மேற்பட்ட வகை வகையான தாவரங்கள் உள்ளன. கூடவே நடைபாதைகளும், சிறுவர் விளையாட ஊஞ்சல்களும், இளைப்பாற இடங்களும் என பெரியவர்களுக்கு 10 ரூபாயும் சிறுவர்களுக்கு 5 ரூபாயும் நுழைவு கட்டணமாக வாங்கிக்கொண்டு இயற்கை எழில் கொஞ்சும் பகுதியை அழகாக காண்பித்து வருகின்றனர். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பூங்கா அனுமதிக்கப்படும் நிலையில் வாரத்தில் செவ்வாய்கிழமை மட்டும் பூங்கா பராமரிப்பு பணிக்காக அன்றைய தினம் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதில் அரசு பள்ளி மாணவர்கள் குழுவாக வந்தால் அவர்களுக்கு கட்டணமும் வழங்கப்படுவதில்லை என்பது கூடுதல் சிறப்பாக அமைகிறது.

 

தற்போது கொரோனா தாக்கத்தின் குறைவு ஏற்பட்டிருக்கும் போது தற்போது பூங்காக்கள் திறக்க அனுமதியானது வழங்கப்பட்டுள்ள இந்த தருணத்தில் குடும்பத்தோடு பட்டாம்பூச்சி பூங்கா சென்று சிறிதுநேரம் பட்டாம்பூச்சியாய் துன்பங்கள் சோகங்கள் என அனைத்தையும் மறந்து கொஞ்சி விளையாட சிறந்த இடமாக திருச்சியில் இன்றளவும் திகழ்ந்து வருகிறது….

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய https://chat.whatsapp.com/GHoBSZRd0IRL3LL0595Pg8

Leave A Reply

Your email address will not be published.