பைக் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறையில் உள்ள துறையூர் திருச்சி சாலையில் மோட்டார் பைக் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். உடன் வந்த இருவர் காயம் அடைந்தனர்.
மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை ஊராட்சியில் உள்ள காளவாய்ப்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் 14 வயதான சாரதி. இவர் திருவெள்ளறை அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை மோட்டார் பைக்கில் சாரதி அவரது அண்ணன் 29 வயதான சுபாஷ் மற்றும் 27 வயதான சரத் ஆகிய மூவரும் திருச்சி துறையூர் சாலையில் வந்து கொண்டிருந்தனர். பைக்கை சுபாஷ் ஓட்டி வந்துள்ளார்.அப்போது திருவெள்ளறை பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது எதிரே வந்த அரசு பேருந்து மோட்டார் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் பைக்கில் நடுவில் அமர்ந்திருந்த பள்ளி மாணவன் சாரதி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.சுபாஷ் மற்றும் சரத் இருவரும் காயம் அடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் உயிரிழந்த பள்ளி மாணவன் சாரதியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயப்பட்ட இருவரும் மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.