மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம்…
திருச்சியில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் நடைபெற்ற முகாமில் ஏராளமான பொதுமக்கள் பயன் பெற்றனர்…
திமுக அரசின் நான் முதல்வன், களத்தில் முதல்வர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடர்ந்து மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தது. இந்நிலையில், மக்களின் குறைகளுக்கு தீர்வுக்கான சோதனை அடிப்படையில் இந்த திட்டம் தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் நடைபெறுகிறது. அதன் ஒருபகுதியாக திருச்சி மாவட்டத்தில் தில்லைநகர் பகுதியில் உள்ள மக்கள் மன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த முகாமில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார், திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மற்றும் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டு மனுக்கள் பதிவு செய்யப்படுவதை பார்வையிட்டதுடன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
மக்களுடன் முதல்வர் முகாமில் பொதுமக்கள் மற்றும் தொழில்முனைவோர் கலந்து கொண்டு புதிய மின்இணைப்பு, மின் வீதப்பட்டியல் மாற்றம், பெயர்மாற்றம், மின்பளு மாற்றம், குடிநீர்-கழிவுநீர் இணைப்புகள், சொத்துவரி பெயர்மாற்றம், பிறப்பு-இறப்பு சான்றிதழ், திடக்கழிவு மேலாண்மை, பட்டா மாறுதல், உட்பிரிவு நிலஅளவை, இலவச வீட்டு மனைப்பட்டா, வாரிசு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்பட அரசு சார்ந்த சேவைகளுக்கு விண்ணப்பித்தனர்
இந்த மனுக்கள் இணையத்தளத்தில் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.