திருச்சி மாவட்டத்தில் கணினி பட்டா தொடர்பான திருத்தங்கள் மேற்கொள்ள நாளை சிறப்பு முகாம்
பட்டா மாறுதல் தமிழ்நாடு அரசின் உத்தரவிற்கிணங்க, திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களின் பெயர்களில் உள்ள கணினி பட்டா தொடர்பான திருத்தங்களுக்கு தீர்வு காணும் வகையில் ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமை கிராம அளவில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது. தற்போது திருச்சி மாவட்டத்தில் உள்ள வருவாய் வட்டங்களில் நாளை (புதன்கிழமை) சிறப்பு பட்டா மாற்றம் தொடர்பான முகாம் நடைபெறும் கிராமங்களின் விவரம் வருமாறு:-
லால்குடி தாலுகாவில், புஞ்சை சங்கேந்தி, நஞ்சை வருவாய் கிராமத்துக்கு புஞ்சை சங்கேந்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியிலும், வி.துறையூர், மாடக்குடி வருவாய் கிராமத்துக்கு மாடக்குடி கிராம பஞ்சாயத்து சேவை மைய கட்டிடத்திலும், மண்ணச்சநல்லூர் தாலுகாவில் கரியமாணிக்கம் மேற்கு, கிழக்கு வருவாய் கிராமத்துக்கு சிறுகனூர் ஊராட்சி மன்ற கட்டிடத்திலும், முசிறி தாலுகாவில் ஜெயங்கொண்டான் கிராமத்துக்கு கிராம பஞ்சாயத்து சேவை மைய கட்டிடத்திலும், பிள்ளாபாளையம் கிராமத்துக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், துறையூர் தாலுகாவில் ஒக்கரை கிராமத்துக்கு கிராம நிர்வாக அலுவலகத்திலும், கலுங்கமுடையான்பட்டி(கொல்லப்பட்டி உள்பட) கிராமத்துக்கு கிராம நிர்வாக அலுவலகத்திலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுபோல் தொட்டியம் தாலுகா வாள்வேல்புத்தூர் கிராமத்துக்கு ஊராட்சி மன்ற கட்டிடத்திலும், மணப்பாறை தாலுகாவில் புதூர் கிராமத்துக்கு ஊராட்சி மன்ற கட்டிடத்திலும், எப்.கீழையூர் கிராமத்துக்கு கிழவன்பட்டி கிராம பஞ்சாயத்து சேவை மைய கட்டிடத்திலும், ஸ்ரீரங்கம் தாலுகாவில் கொட்டப்பட்டு கிராமத்துக்கு புனித லூர்ட்ஸ் தொடக்கப்பள்ளியிலும், அந்தநல்லூர் கிராமத்தக்கு அந்தநல்லூர் வட்டார ஒன்றிய அலுவலகத்தில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழு கட்டிடத்திலும், மருங்காபுரி தாலுகாவில் லெக்கநாயக்கன்பட்டி, கண்ணுக்குழி கிராமத்துக்கும், திருவெறும்பூர் தாலுகாவில் அரசங்குடி கிராமத்துக்கும் அந்தந்த கிராம பஞ்சாயத்து சேவை மையகட்டிடத்திலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
அனைத்து வருவாய் கிராமங்களிலும், சிறப்பு முகாம் அன்று துணை கலெக்டர் நிலையிலான கண்காணிப்பு அலுவலர் தலைமையில் சம்பந்தப்பட்ட தாசில்தார், மண்டல துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரால் பொதுமக்களிடமிருந்து கணினி பட்டாவில், புல எண் மற்றும் நிலத்தின் உட்பிரிவு தொடர்பான தவறான பதிவுகள், பரப்பு வித்தியாசம், பட்டாதாரர் பெயர், தந்தை பெயர் மற்றும் பாதுகாவலரின் பெயர் திருத்தம், பட்டாதாரரின் உறவுமுறை தொடர்பான திருத்தங்கள், பட்டாவில் உள்ள கலங்கள் காலியாக உள்ளவை, பட்டாதாரர் பெயர் மற்றும் விஸ்தீர்ணம் அருகில் உள்ள பட்டாதாரரின் பெயரில் இருப்பவை தொடர்பான திருத்தங்கள் செய்ய வேண்டி மனுக்கள் பெறப்படும்.
மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்க்கொண்டு வட்ட அளவிலான கண்காணிப்பு மற்றும் தீர்வு அலுவலரால் உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அன்றையதினமே பட்டாவில் உரிய திருத்தங்கள் மேற்க்கொண்டு சிறப்பு முகாம் நடைபெறும் தினத்தன்றே மனுதாரருக்கு உரிய உத்தரவு வழங்கப்படும். மேற்படி முகாம் நாளன்று பட்டா மாறுதல் தொடர்பான மனுக்கள் மட்டுமன்றி முதியோர் ஓய்வூதியம், இலவச வீட்டுமனைப்பட்டா, ஆக்கிரமிப்பு வரன்முறைப்படுத்தி பட்டா வழங்கக் கேட்டல், அடிப்படை வசதிகள் கேட்டல் மற்றும் இதர மனுக்களையும் பொதுமக்கள் அளிக்கலாம். எனவே, விவசாயிகள் மற்றும் நிலஉடமைதாரர்கள் தங்களுக்கு பாத்தியப்பட்ட நிலங்களுக்குரிய கணினி பட்டாக்களில் திருத்தங்கள் ஏதும் செய்யப்பட வேண்டியது இருப்பின், தங்கள் கிராமங்களில் நடைபெறும் முகாம்கள் மூலம் பயன்பெறலாம்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.