திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே மேலகுமரேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாதமணி. ‘பெல்’ நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சாந்தி(வயது 48). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். சாந்தி அப்பகுதியில் உள்ள பேக்கரியில் வேலை பார்த்ததோடு, சேலை மற்றும் நைட்டி போன்றவற்றை மாதத்தவணைக்கு அப்பகுதியில் விற்பனை செய்து வந்துள்ளார்.
இவரிடம், அதே பகுதியில் கோனார் தெருவில் வசிக்கும் ராமதுரையின் மனைவி பூங்குழலி(33) துணி வாங்கி உள்ளார். அந்த வகையில், ரூ.12 ஆயிரம் கடனாகியுள்ளது. இதனால் சாந்தி பூங்குழலியிடம் தனக்கு தரவேண்டிய பணத்தை தரும்படி அடிக்கடி கேட்டுள்ளார். ஆனால் பூங்குழலி பணத்தை கொடுக்கவில்லை.
இந்தநிலையில் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 26-ந்தேதி தனக்கு ஒருவர் பணம் தருவதாக கூறியுள்ளார். எனவே மதியம் 3 மணிக்கு வீட்டுக்கு வந்தால் பணத்தை தருகிறேன் என்று சாந்தியிடம் அவர் கூறியுள்ளார். அதை நம்பி சாந்தி தனது வீட்டில் இருந்து பூங்குழலியின் வீட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். தனது வீட்டுக்கு பணம் வாங்க வந்த சாந்தியை பூங்குழலி கட்டிடவேலைக்கு பயன்படுத்தும் சாந்துகரண்டியால் தலையில் தாக்கியதுடன், கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
பின்னர், அவருடைய காதை அறுத்து கம்மல் மற்றும் சங்கிலி உள்ளிட்ட 5 பவுன் நகைகளை கொள்ளையடித்தார். இதைத்தொடர்ந்து வீட்டின் பின்பகுதியில் தென்னை மரத்துக்கு தோண்டிய குழியில் சாந்தியின் உடலை போட்டுவிட்டு, பழைய தார்ப்பாய் போட்டு மூடிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
பின்னர் அந்த நகைகளை அருகில் உள்ள அடகுகடையில் அடகுவைத்து பணம் பெற்றுக்கொண்டு பூங்குழலி தலைமறைவானார். இதற்கிடையே வீட்டில் இருந்து வெளியே சென்ற சாந்தியை காணவில்லை என்று அவருடைய கணவர் புகார் செய்தார். இதுகுறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாந்தியை தேடி வந்தனர்.
2 நாட்கள் கழித்து ராமதுரையின் வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வருவதாக அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் கிராமநிர்வாக அதிகாரி செல்வகணேஷ் திருவெறும்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் அங்கு சென்று பார்த்த போது, ஒரு பெண் கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது.
அந்த உடலை கைப்பற்றி விசாரணை நடத்திய போது, கொலை செய்யப்பட்டது சாந்திதான் என்றும், அவரை திட்டமிட்டு தனது வீட்டுக்கு வரவழைத்து கொலை செய்தது பூங்குழலி தான் என்றும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பூங்குழலியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுதொடர்பான வழக்கு திருச்சி மகிளா கோர்ட்டில் நீதிபதி ஸ்ரீவத்சன் முன்னிலையில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் அருள்செல்வி ஆஜர் ஆனார். சாட்சி விசாரணைகள் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
அதில் குற்றம் சாட்டப்பட்ட பூங்குழலிக்கு சாந்தியை கொலை செய்த குற்றத்துக்காக ஆயுள்தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும், நகைகளை திருடிய குற்றத்துக்காக 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதமும், சாட்சியங்களை அழிக்க முயன்ற குற்றத்துக்காக ஒரு ஆண்டு சிறைதண்டனை மற்றும் ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். மேலும் இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்கவும் அவர் உத்தரவிட்டார்.