துடையூரில் நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டம்
துடையூரில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி ஊராட்சிக்கு உட்பட்ட துடையூர் கிராமத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
இந்த சிறப்பு கிராம கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பானு முருகேசன் தலைமையேற்று வாழ்த்துரை ஆற்றினார். ஊராட்சி மன்ற செயலர் காமாட்சி ஊரக வளர்ச்சித் துறையின் திட்டங்கள் குறித்தும் திருவாசி ஊராட்சியின் நிதிநிலை குறித்தும் உரையாற்றினார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் மண்ணச்சநல்லூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயராணி வேளாண்மையில் தண்ணீரை கையாளும் முறைகள் குறித்தும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் குறித்தும் துறைச் சார்ந்த பிற திட்டங்கள் குறித்தும் விளக்க உரையாற்றினார். வேளாண்மை அலுவலர் ஐஸ்வர்யா மாற்று பயிர் சாகுபடி குறித்தும் சிறுதானிய பயிர் சாகுபடி குறித்தும் உரையாற்றினார். வேளாண்மை உதவி அலுவலர் பார்த்திபன் நடப்பில் உள்ள மானியங்கள் குறித்தும், திட்டங்கள் குறித்தும் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளாக ஒரு பயனாளிக்கு இரண்டு தென்னை கன்றுகள் வீதம் 100 சதவீதம் மானியத்தில் 200 பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டது, மேலும் பேட்டரி தெளிப்பான் 50% மானியத்தில் 10 பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டது. ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாண்டீஸ்வரி சுப்பாபிள்ளை நன்றி உரை ஆற்றினார். ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், வருவாய் துறை சார்பில் கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர், பள்ளி தலைமை ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், இல்லம் தேடி மருத்துவம் பணியாளர், மக்கள் நலப் பணியாளர், முன்னோடி விவசாயிகள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.