திருச்சிக்கு அக்கறை காட்டும் திமுக… அடுக்கடுக்காய் வரும் திட்டம்… அமைச்சர் நேரு பேட்டி!..

0 791
Stalin trichy visit

திருச்சி. மார்ச்.22.

திருச்சி மாவட்ட வளர்ச்சியின் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி அக்கறை கொண்டுள்ளதாகவும், சென்னையை அடுத்த பெருநகரமாக திருச்சியை உருவாக்க வேண்டுமெனவும் எங்களிடம் முதலமைச்சர் அடிக்கடி வலியுறுத்தி வருகிறார் என்றும் அமைச்சர் கே.என்.நேரு கூறினார். தமிழக அரசின் 2023-2024 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நேற்று நடந்த தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

வருகிற நிதியாண்டில் துறைவாரியாக ஒதுக்கப்பட்டுள்ள நிதி, மற்றும் செயல்படுத்தப்பட்டுள்ள முக்கிய திட்டங்கள் குறித்தும்  பட்ஜெட் தாக்கலின் போது பேசினார் அமைச்சர் பிடிஆர். இந்நிலையில்  தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டால் திருச்சிக்கும், திருச்சி மக்களுக்கும் எந்த பயனும் இல்லை என்று திருச்சி மாவட்ட மக்கள் கூறுவது அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதன்படி,  பட்ஜெட்டில் திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்காக  ரூபாய் 110 கோடி ஒதுக்கீடு செய்தது. திருச்சி மாவட்டத்தின் புண்ணிய திருத்தளமாக விளங்கும் சமயபுரம் மாரியம்மன் கோவில் வளாகத்தில் பெருந்திட்ட வளாகம் அமைக்கும் பணி தொடங்கப்படும் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாது, திருச்சி மாநகராட்சி பொது இடங்களில் வைஃபை வசதி ஏற்படுத்தப்படும் என்றும், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக நவீன விடுதி கட்டப்படும் என்ற திட்டங்கள் பட்ஜெட் தாக்கலின் போது அறிவித்தார் அமைச்சர் பிடிஆர். இந்நிலையில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருச்சியிலுள்ள 09 சட்டமன்ற தொகுதியில் அனைத்திலும் திமுக அரசே வென்றது. ஆனால் சென்னை,கோவை,சேலம்,மதுரை போன்ற மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் குறைந்த தொகுதிகளில் மட்டுமே திமுக வென்ற நிலையில், அம்மாவட்ட நலங்களுக்காக ஒதுக்கிய நிதியை விட திருச்சி மாவட்டத்திற்கு குறைவான நிதி ஒதுக்கிய அரசின் மேல் திருச்சி மாவட்ட மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

பட்ஜெட் தாக்கலைப் பற்றி சமுக வலைதளங்களில் #திண்டாடும்_திருச்சி எனும் ஹாஸ்டேகுகள் வைரலாகி வந்த நிலையில் இது தொடர்பாக நகராட்சித்துறை அமைச்சரும், திருச்சி மேற்கு சட்டமன்றதொகுதி உறுப்பினரும், திமுகவின் முதன்மைச் செயலாளருமான கே.என்.நேருவிடம் கேட்டபோது, வேறு எந்த மாவட்டங்களிலும் இல்லாத அளவிற்கு கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.1,000 கோடிக்கும் அதிகமான திட்டங்களை திருச்சிக்கு திமுக அரசு அறிவித்துள்ளது என்றும், அவற்றில் பெரும்பாலான திட்டங்களின் பணி முடிந்தும், சில நடைபெற்றுக்கொண்டும் உள்ளன என்றும், இன்னும் வரக்கூடிய நாட்களில் ஏராளமான திட்டங்கள் திருச்சிக்கு கொண்டுவரப்பட உள்ளன என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த பட்ஜெட்டில் திருச்சிக்கு ஏதும் பெரிய திட்டங்கள் இல்லையென திருச்சி மக்கள் நினைக்க வேண்டாம், அடுத்ததாக வரக்கூடிய மானியக்கோரிக்கையின் போது பல்வேறு திட்டங்களை திருச்சிக்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளிப்பார் என்றும்,  அதற்கான அறிவிப்பு வரும் வரை திருச்சி மக்கள் பொறுமையாக இருந்து பாருங்கள் என்றும் அமைச்சர் நேரு தெரிவித்தார்.

அதுமட்டுமில்லாது, இதற்கு முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு திருச்சி மாவட்டம் ஏராளமான வளர்ச்சித்திட்டங்களைப் பெற்றுள்ளது என்றும், அது தொடரும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இந்நிலையில், திருச்சி மாவட்ட வளர்ச்சியின் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி அக்கறை கொண்டுள்ளதாகவும், சென்னையை அடுத்த பெருநகரமாக திருச்சியை உருவாக்க வேண்டுமெனவும் எங்களிடம் முதலமைச்சர் அடிக்கடி வலியுறுத்தி வருகிறார் என்றும் அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.