குழந்தைகள் நல குழுமத்தில் கையெழுத்திட்டு வந்த நிலையில் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

0 592
Stalin trichy visit

திருச்சி எடமலைப்பட்டி புதூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் வீரமணி (வயது 21). சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இதுபற்றி தகவல் அறிந்த மணிகண்டம் ஊராட்சி ஒன்றிய ஊர் நல அலுவலர் கவுரி இதுபற்றி குழந்தைகள் நல அலுவலருக்கு தகவல் கொடுத்தார். இதைத்தொடர்ந்து சைல்டு லைன் அமைப்பினர் அந்த சிறுமியை மீட்டு குழந்தைகள் நல அலுவலர் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

பின்னர் மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்யக்கூடாது என்று அவருடைய பெற்றோருக்கும் அறிவுரை வழங்கினர். மேலும் அந்த சிறுமி கடந்த 1½ ஆண்டுகளாக மாதம் தோறும் குழந்தைகள் நல குழுமத்தில் கையெழுத்திட்டு வந்தார்.
இந்த நிலையில் கடந்த 5 மாதங்களாக அந்த சிறுமி கையெழுத்திட வரவில்லை. இதைத்தொடர்ந்து ஊர் நல அலுவலர் கவுரி மற்றும் சைல்டு லைன் அமைப்பைச் சேர்ந்த ராபின், காந்திமதி ஆகியோர் அந்த சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த சிறுமி 2 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஊர் நல அலுவலர் கவுரி, இதுபற்றி திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சிறுமியின் வீட்டுக்கு சென்று, விசாரணை நடத்தினர்.
விசாரணையில், வீரமணியின் தாயார் கடந்த ஆகஸ்டு மாதம் 23ந் தேதி உடல்நலக்குறைவால் இருந்தபோது, அந்த சிறுமி, வீரமணியின் வீட்டிற்கு சென்று அவருடைய தாயாரை கவனித்துக்கொண்டதுடன், வீட்டு வேலைகளை செய்து வந்ததும், அப்போது அங்கிருந்த வீரமணி சிறுமியை படுக்கை அறைக்கு அழைத்து சென்று, நாம் தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறோமே என்று கூறி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

அதன்பின்னர், அடிக்கடி சிறுமியை தனியாக அழைத்து வீரமணி தவறாக நடந்து கொண்டதும், இதனால் சிறுமி கர்ப்பம் ஆனதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சிறுமியை மீட்ட போலீசார், அவரை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ஊர் நல அலுவலர் கவுரி கொடுத்த புகாரின் பேரில், கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீசார் வீரமணி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் வீரமணியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.