சரக்கு வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பலி
திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த சிறுகனூர் அருகே நெடுங்கூர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பைக் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா பட்டுதுறை கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் 25 வயதான மணிகண்டன். இவர் நேற்று மாலை பெரம்பலூரில் இருந்து திருச்சி நோக்கி தனது பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது சிறுகனூர் அருகே நெடுங்கூர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த சரக்கு வாகனம் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட படுகாயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இது குறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த சிறுகனூர் போலீசார் விபத்தை ஏற்படுத்திய சரக்கு வாகன டிரைவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.