
திருச்சி, மே 26 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோவில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்ற விழா இன்று நடைபெற்றது. தேரோட்டம் வருகின்ற ஜூன் 2- ஆம் தேதி நடக்கிறது.
லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுந்தரவல்லி தாயார் சமேத ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. பிரம்மனுக்கு அன்பினால் பெருமாள் உபதேசம் செய்ததால் இவ்வூருக்கு அன்பில் எனப்பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. இக்கோவில் 108 வைணவ திவ்யதேச திருத்தலங்களில் 4-வது இடத்தில் உள்ளது. திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் பாடப்பெற்றது சிறப்பு ஆகும். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் இக்கோவிலில் தேரோட்டம் நடைபெற்றதாக கோவில் குறிப்புகளில் காணப்படுகிறது. காலப்போக்கில் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் கோவில் தேர், மதில் சுவர்கள் சிதிலமடைந்து தேரோட்டம் நடைபெறவில்லை என இவ்வூர் பொதுமக்கள் கூறுகின்றனர். இதனையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ரூ.50 லட்சத்தில் புதிய தேர் செய்யப்பட்டது. இந்த தேரின் வெள்ளோட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் வைகாசி விசாக திருவிழா தேரோட்டம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஓவ்வொரு நாளும் சுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா நடைபெறும் இதில் கோவில் பட்டாச்சாரியார்கள் பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகின்ற – ஜூன் 2 ஆம் தேதி திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.