கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த வருடம் தீபாவளி பண்டிகையின் போது எதிர்பார்த்த அளவிற்கு திரைப்படங்கள் வெளியாகததால் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் தற்போது நோய் தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் தியேட்டர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் சூப்பர் ஸ்டார் நடித்த அண்ணாத்த திரைப்படம் தீபாவளி திருநாளில் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் திருச்சியில் ஹோட்டலில் ஒரு ரூபாய்க்கு தோசை வழங்கி ரஜினி ரசிகர் கொண்டாடிவருகிறார்.
திருச்சி மாவட்டம் கள்ளிக்குடி சேர்ந்தவர் கர்ணன். இவர் திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான இவர் தான் நடத்தி வரும் ஹோட்டல் பெயரும் ரஜினிகாந்த் நடித்த படம் பெயரிலேயே அண்ணாமலை என வைத்துள்ளார்.

இந்தநிலையில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் வெளியாவதையொட்டி மகிழ்ச்சி அடைந்துள்ள கர்ணன் தனது ஹோட்டல் முழுவதும் அண்ணாத்த படங்கள் உள்ள பிளக்ஸ் பேனர் மற்றும் படங்களை ஒட்டி அலங்கரித்து உள்ளார். ரஜினியின் புதுப்படம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் நேற்று ஒருநாள் தனது ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யும் தோசையை ரூ.1 ரூபாய்க்கு சலுகை விலையில் விற்பனை செய்தார்.
அண்ணாத்த தோசை ரூ.1 என அறிவிப்பு அட்டையும் வைத்துள்ளார். இதுகுறித்து கர்ணன் கூறுகையில்…”நான் ரஜினியின் தீவிர ரசிகன். பத்தாம் வகுப்பு படித்தபோது ரஜினி நடித்த பாயும்புலி படம் பார்த்தேன். அப்போது முதல் ரஜினியின் அனைத்து படங்களையும் ரிலீஸ் ஆகும்போது குடும்பத்துடன் சென்று பார்த்து விடுவேன். அவருக்கு தாதா சாகிப் பால்கே விருது கிடைத்திருப்பது அவரது நடிப்புக்கு கிடைத்த அங்கீகாரம். அவர் நடித்து வெளியாகும் அண்ணாத்த படம் மாபெரும் வெற்றி பெறும் இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்த தான் தோசையை விற்பனை செய்கிறேன்” என்றார்.