அய்யப்ப பக்தர்கள் வாகனம் கவிழ்ந்து விழுந்ததில் 9 பேர் காயம்
மணப்பாறை அருகே பாலத்தடுப்புக்கட்டையில் வேன் மோதிய விபத்தில் ஐயப்ப பக்தர்கள் 9 பேர் காயம்.
மயிலாடுதுரை மாவட்டம், தரங்கம்பாடி அருகே உள்ள பெருமாள்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுமார் 16 பேர் ஒரு வேனில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று விட்டு பின்னர் ஊர் திரும்பினர். இன்று காலை திண்டுக்கல் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறையை அடுத்த பொத்தமேட்டுப்பட்டி ஆத்துப்பாலம் அருகே சென்ற போது வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பாலத்தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்தது. இதில் மயிலாடுதுறை பெருமாள்பேட்டை பகுதியைச் சேர்ந்த முத்து (வயது 45), ஸ்ரீஜன் (வயது 8) உள்ளிட்ட 9 ஐயப்ப பக்தர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.