திருச்சி, ஜூன் 11 திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கொசவபட்டியைச் சேர்ந்தவர் கணேசன் (58). இவர் வையம்பட்டியில் பருத்தி மண்டி கடை வைத்துள்ளார். இவரது மனைவி விஜயலெட்சுமி (48). இவர் செக்கணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு சமையலாக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வையம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பிவிட்டு திண்டுக்கல் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றனர். அப்போது சென்னைக்கு காய்கனிகள் ஏற்றிச் சென்ற வேன் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற கணவன் – மனைவி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சம்பவம் தொடர்பாக வையம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் – மனைவி விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.