இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் காலதாமதம் : அரசு மீது குற்றச்சாட்டு
திருச்சி, ஜன.20 இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பாமல் மாநில அரசு காலம் தாழ்த்துகிறது.- இடைநிலை ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்கள் குற்றச்சாட்டு.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று இதுவரை பணி அமர்த்தாமல் இருப்பதை கண்டித்து மனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து இடைநிலை ஆசிரியர் பணிக்காக தேர்வு எழுதியவர்கள் பேசியது..
கடந்த 2013 ஆம் ஆண்டு இடைநிலை ஆசிரியர் பணிக்கான காலியிடங்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வை எழுதி தேர்ச்சி பெற்ற பிறகு மீண்டும், கடந்த ஆண்டு நியமனத் தேர்வு நடத்தப்பட்டது. அந்தத் தேர்வையும் எழுதிய பிறகு இதுவரை முறையான காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான முயற்சிகளை மாநில அரசு எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர்.
கடந்தாண்டு நடைபெற்ற நியமன தேர்வை 25,000 பேர்கள் எழுதியுள்ளனர். ஆனால் மாநில அரசு 2768 காலி பணியிடங்கள் உள்ளது அவற்றை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது வேதனை அளிக்கிறது.
பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான காலியிடங்கள் உள்ளது அவற்றை முறையாக நிரப்ப வேண்டும்.
இது குறித்து பலமுறை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலதாமதம் படுத்தி வருகிறார். தொடர்ந்து அவரை சந்தித்து பலமுறை கோரிக்கை வைத்த போதெல்லாம் விரைவில் விரைவில் விரைவில் என்ற பதில் மட்டுமே வருகிறது.
உடனடியாக இடைநிலை ஆசிரியருக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கையை மாநில அரசு எடுக்க வேண்டும் காலதாமதம் படுத்தக் கூடாது என கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.