மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு : பொதுமக்கள் சாலை மறியல்
திருச்சி, ஜன.20 திருச்சி மாநகராட்சி விரிவாக்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வயலூர் பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்.
திருச்சி மாநகராட்சியை 100 வார்டு கொண்டதாக விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கையை மாநில அரசு மேற்கொண்டது. அதற்காக திருச்சி மாவட்டத்தில் வளர்ச்சி அடைந்து வரும் ஊராட்சிகள் பஞ்சாயத்துகள் நகராட்சிகளை கணக்கெடுத்து அவற்றை திருச்சி மாநகராட்சி உடன் இணைப்பதற்கான அரசாணையை கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் இருக்கக்கூடிய பல்வேறு கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி மாநகராட்சியுடன் எங்களது ஊராட்சி மற்றும் பஞ்சாயத்துகளை இணைக்க வேண்டாம். மாநகராட்சி உடன் இணைத்தால் வரி உயர்வு விவசாயம் பாதிக்கப்படும் என பொதுமக்கள் தொடர்ந்து முழக்கங்களிட்டு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென வயலூர் பகுதியில் சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாநகராட்சி உடன் எங்களது கிராம பகுதிகளை இணைக்க வேண்டாம் நாங்கள் அன்றாட கூலி வேலை செய்பவர்கள் விவசாயத்தை நம்பி வாழ்பவர்கள் எங்களால் வரி உயர்வை சமாளிக்க முடியாது என தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் இட்டனர்.
தொடர்ந்து அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு போராட்டத்தை கைவிட்டனர்.