மதுரை காளியம்மன் கோவிலில் தேர் தூக்கும் உரிமை தர கோரி ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பங்குனி மாதம் நடைபெற உள்ள தொட்டியம் மதுரை காளியம்மன் கோவிலில் தேர் தூக்கும் உரிமை தர வேண்டும் என குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில் தேர் திருவிழா வருடம் தோறும் பங்குனி மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் 32அடி உயரம் உள்ள பெரிய தேரையும் 28 அடி உயரம் உள்ள சிறிய தேரையும் முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் தோளிலும் தலையிலும் தூக்கிவருவது வழக்கம். இந்த வருடத்திற்கான பங்குனி தேர் திருவிழா உற்சவத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் சிறிய தேரை தூக்குவதற்கு தங்களையும் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி குறிப்பிட்ட சமுதாயத்தினர் கோட்டாட்சியரிடம்கோரிக்கை மனு அளித்திருந்தனர். முசிறி கோட்டாட்சியர் மாதவன் உரிய பேச்சுவார்த்தைக்கு பின்னர் முடிவு எடுக்கப்படும் என கூறியிருந்த நிலையில் தொட்டியம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே குறிப்பிட்ட சமுதாயத்தினர் அரை நிர்வாண கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பு ஏற்படுத்தியது. சம்பவ இடத்திற்கு வந்த முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் மற்றும் தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தையா ஆகியோர் அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபடுவது தவறு என்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் உரிய பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்படும் என கூறியதை அடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.