ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்….
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் பாதை யாத்திரையாகவும், வாகனங்கள் மூலமாகவும் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வரத்தொடங்கினர். இதனைத்தொடர்ந்து பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியும், கோவில் நுழைவு வாயில் மற்றும் விளக்கேற்றும் இடத்தில் நெய்தீபம் ஏற்றி தேங்காய் உடைத்தும் அம்மனை வழிபாடு செய்தனர்.
மேலும் சில பக்தர்கள் குழந்தையை கரும்பு தொட்டிலில் சுமந்து வந்தும், அக்னி சட்டி ஏந்தியும் அலகு குத்தி கோவிலை வலம் வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதைத் தொடர்ந்து நீண்ட வரிசையில் நின்று கோவிலுக்குள் சென்ற பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.