வெள்ளியங்கிரி சிவாலயத்தில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்
திருச்சி, மார்ச் 24 மணப்பாறை அருகே வெள்ளியங்கிரி சிவாலயத்தில் நள்ளிரவில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே சின்னமணப்பட்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் சிவாலயத்தின் திருவிழாவை முன்னிட்டு 19 ம் ஆண்டு பூக்குழி இறங்கும் விழா மற்றும் அன்னதான விழா நடைபெற்றது. நள்ளிரவு நடைபெற்ற இவ்விழாவில் கரகம் பாலித்தல் நிகழ்ச்சியும் கொடும்பாளூர் இடங்கழி நாயனார் குழுவினர் கைலாச வாத்தியங்கள் முழங்க கோவில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த ஆழியில் விறகுகள் அடுக்கப்பட்டு தீ பற்றவைக்கப்பட்டது.
பின்னர் 1008 சரண கோஷங்கள் முழங்க தயாராக இருந்த குண்டத்தை சுற்றிவந்த பக்தர்கள் குண்டத்தில் பூக்களை தூவி வழிபாடு செய்தனர். தொடர்ந்து குண்டத்திற்கு சிறப்பு வழிபாடுகள் செய்து பக்தர்கள் ஒவ்வொரு பின் ஒருவராக பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். இதில் தென் கயிலாயம் என போற்றப்படும் வெள்ளியங்கிரி புனித யாத்திரை செல்லும் பக்தர்களும் சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை பூக்குழி இறங்கினர். பூக்குழியில் இருந்த சாம்பலை பக்தர்கள் பிரசாதமாக எடுத்துச் சென்றனர்.
விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் ஏழு பெண்குழந்தைகளை சப்தகன்னியர் தெய்வங்களாக பாவித்து அவர்களின் காலில் விழுந்து பக்தர்கள் வணங்கினர்.
விழாவில் மணப்பாறை சுற்றுவட்டார பகுகளான மணப்பட்டி, ராயம்பட்டி, திருமலையான்பட்டி, பொய்யாமணி, கேட்டைகுளம், பெரியகாலப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.