தொடர் மழை காரணமாக கோரையாறு, குடமுருட்டி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

0 607
Stalin trichy visit

மேட்டூர் அணை அதன் முழுக்கொள்ளளவான 118 அடியை எட்டும் நிலையில் உள்ளது. இதனால் மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்க கூடிய சூழல் உள்ளது. தற்போது 10 ஆயிரம் கன அடி வந்து கொண்டிருக்கிறது. எனவே,வெள்ள பாதுகாப்பு கருதி முக்கொம்பு மேலணை தடுப்பணையிலிருந்து 10,000 கன அடி உபரி நீரை கொள்ளிடம் ஆற்றில் நேற்று மாலை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு திறந்து வைத்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது;-

கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கன மழையின் காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை மற்றும் கபினி அணைகளிலிருந்து திறந்து விடப்பட்ட பெருமளவு தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது, மேலும் கோரையாறு மற்றும் குடமுருட்டி ஆற்றில் வெள்ள நீர் வந்து கொண்டுள்ளது.

தற்பொழுது திருச்சி மாநகரில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்ததற்கு காரணம் வடிகால் உள்ள பகுதிகளிலும் விவசாய நிலங்களிலும் வீடுகளை கட்டி ஆக்கிரமித்துள்ளது தான். தற்போது வரக்கூடிய மழை நீரானது புதுக்கோட்டை விராலிமலை பகுதியில் உள்ள மழைநீர். வெள்ள அபாயம் திருச்சி மாவட்டத்திற்கு இல்லை. தற்போது சுமார் 5 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

நாளை 2,500 கன அடியாக குறையும். படிப்படியாக 24 மணி நேரத்தில் மழை நீரின் அளவு குறையும் வீடுகளுக்குள் உள்ள மழை நீரும் வடியும் என குறிப்பிட்டார். திருச்சி மாவட்டத்தில் உள்ள 154 குளங்கள் அரியாறு நீர்வள ஆதாரத்துறையில் உள்ளது. இதில் 75 சதவீதத்திற்கும் மேல் என 87 குளங்கள் நிரம்பி உள்ளன. 100 குளங்கள் இன்னும் இதில் நிரம்ப வாய்ப்புள்ளது. பஞ்சாயத்து கட்டுப்பாட்டில் உள்ள 1251 குளங்களில் 60 சதவீதம் நிரம்பி விட்டது குறிப்பிடத்தக்கது என்றார்.

மேலும் கரையோர கிராமங்களில் உள்ள மக்கள் மற்றும் சலவைத் தொழிலாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லு மாறும் அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. காவிரியில் அதிக நீர் வரத்து வந்து கொண்டிருக்கும் தற்போதைய நிலையில் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, மீன் பிடிக்கவோ அல்லது பொழுது போக்கவோ பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. பாதுகாப்பற்ற கரையோரங்கள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் நின்று கொண்டு பொதுமக்களோ அல்லது மாணவர்களோ “செல்பி” எடுக்க அனுமதி இல்லை.

வெள்ள அபாயம் ஏற்பட்டால் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். 93840 56213 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பலாம். மேலும் வட்டாட்சியர்களை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள தெரிவிக்கலாம். டி.என். ஸ்மார்ட் என்ற செயலியின் மூலமும் தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்

Leave A Reply

Your email address will not be published.