திருச்சி, மதுரை பைபாஸ் சாலை, எடமலைப்பட்டிபுதூர் அருகே உள்ள பசுமை பூங்கா எதிரே உள்ள காலி மனையில் நேற்று மாலை சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த முட்புதரில் பார்த்தபோது, குவியல் குவியலாக மனித மண்டையோடுகள் மற்றும் எலும்புக்கூடுகள் இருப்பதைக் கண்டு சிறுவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இதனை அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் சிறுவர்களை அழைத்து விசாரித்தனர். அப்போது இப்பகுதியில் மண்டையோடுகள் கிடப்பதாக தகவல் தெரிவித்தனர். உடனே இதுகுறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாலையோரத்தில் மூட்டை மூட்டையாக கிடந்த மண்டையோடுகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.