மணப்பாறையில் கோவில் வாசலில் துப்பாக்கி கிடந்ததால் பரபரப்பு

0 319
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆளிப்பட்டியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பூஜை நடைபெறும். இதுமட்டுமின்றி தினமும் கோவிலை மாலை நேரத்தில் திறந்து மின்விளக்கை எரிய விட்டு காலையில் நிறுத்தி வைப்பது வழக்கம்.

இதே போல் காலை மின்விளக்கை நிறுத்தச் சென்றபோது கோவில் வாசலில் துப்பாக்கி ஒன்று கிடந்ததைப் கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிஸ்டல் ரக துப்பாக்கி போல் இருந்தததோடு அந்த துப்பாக்கியின் உறை மற்றும் பால்ரஸ்சும் அங்கு இருந்தது. இதைப்பார்த்த மக்கள் உடனே இதுபற்றி மணப்பாறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் கருணாகரன், சப் இன்ஸ்பெக்டர் கருப்பசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய பின்னர் இதுபற்றி தகவலை திருச்சியில் உள்ள ஆயுத வினைஞர் மற்றும் விரல் ரேகை நிபுணருக்கு தகவல் கொடுத்தனர்.


பின்னர் சம்பவ இடத்திற்கு ஆயுத வினைஞர் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான குழுவினர் மற்றும் விரல்ரேகை நிபுணர் வீரபிரதீப் ஆகியோர் வந்து துப்பாக்கியை எடுத்து ஆய்வு செய்து பார்த்தனர். பிஸ்டல் டைப் போன்று அந்த துப்பாக்கி இருந்ததுடன் பால்ரஸ் செலுத்தி சுடும் வகையில் இருந்தது.

பின்னர் தான் அது நாட்டு துப்பாக்கி என்பதும் பறவைகளை வேட்டையாட பயன்படுத்தப்படுகின்ற வகையை சேர்ந்தது என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் துப்பாக்கியை மணப்பாறை போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். முன்னதாக கோவில் வாசலில் துப்பாக்கி கிடந்த தகவல் அறிந்ததும் அந்த பகுதி மக்கள் அதிக அளவில் திரண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.