மேட்டு வாய்க்கால் – பள்ள வாய்க்கால்களில் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை
பொதுப் பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு அலுவகத்தில் பள்ளவாய்க்கால், மேட்டு வாய்க்கால் விவசாயிகள் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க கோரிக்கை.
திருச்சி மாவட்டம் முசிறியில் வடகரை வாய்க்காலின் கிளை வாய்க்கால்களான மேட்டு வாய்க்கால் பள்ள வாய்க்கால் உள்ளது. இதன் மூலம் முசிறி மேற்கு, குஞ்சநாயக்கன்பாளையம், சந்தப்பாளையம், ஆலமரத்துப்பட்டி, வடுகப்பட்டி. முசிறி கிழக்கு, மங்கரை பேட்டை, வெள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் குறுவை சாகுபடி (சித்திரை பட்டம் ) நெல் பயிரிடுவது வழக்கம். தற்போது மேட்டூர் அணையில் நூறு அடிக்கும் மேலாக தண்ணீர் உள்ளது. எனவே தற்போது சாகுபடி செய்ய தண்ணீர் வழங்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை நீர் வள ஆதார அமைப்பு உதவி செயற்பொறியாளர் கொளஞ்சிநாதனிடம் கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர். அப்போது விவசாயிகளிடம் பேசிய உதவி செயற் பொறியாளர் கொளஞ்சிநாதன் காவிரியில் ஜனவரி 28 தேதி தண்ணீர் அடைத்து விட்டால் ஜூன் 12 தான் விவசாயத்திற்கு தண்ணீர் கொடுப்பது வழக்கம். தற்போது குடிநீர் மற்றும் கூட்டு குடிநீர் திட்டங்களுக்காக ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடுவது 2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைமுறையாக உள்ளது. ஆண்டு சாகுபடி பயிர்களான வாழை மற்றும் வெற்றிலைக்கு தற்காலிக குரம்பு அமைத்து சிறிதளவு தண்ணீர் வழங்கப்படும் , நிலத்தடி நீர்மட்டம் வற்றாமல் இருக்கவும் கால்நடைகளுக்காகவும் சிறிதளவு தண்ணீர் வடகரை வாய்க்கால் மற்றும் அதன் உப வாய்க்கால்களில் விடப்படுகிறது மேலும் ஆண்டு மராமத்து பணிகள் மற்றும் வாய்க்கால்களில் சிறப்பு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நெல் சாகுபடிக்கு தொடர்ச்சியாக தண்ணீர் விடுவது என்பதற்கு சாத்தியக்கூறு குறைவு எனக் கூறினார். விவசாயிகள் தங்களது கோரிக்கையை நீர் வள அமைப்பு மாவட்ட அதிகாரி ,மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரிடம் தெரிவிப்பதாக கூறி சென்றனர். இதன் காரணமாக பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு உதவி செயற்பொறியாளர் அலுவலக வளாகம் சற்று பரபரப்பாக காணப்பட்டது.