முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் முகாம்
திருச்சி, ஜன.31 திருச்சி மாவட்டம், முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு முசிறி கோட்டாட்சியர் மாதவன் தலைமை வகித்தார்.வட்டாட்சியர்கள் முசிறிசண்முகப்பிரியா,தொட்டியம் ஞானமிர்தம் மற்றும் அரசு துறை அலுவலர்கள் முன்னிலை வைத்தனர்.
இக்கூட்டத்தில் தோட்டக்கலை, வேளாண்மை துறை மற்றும் அலுவலர்கள் அரசின் திட்டங்கள் குறித்து பேசினர். கூட்டத்தில் விவசாய சங்க தலைவர் அய்யாகண்ணு பேசும் பொழுது கோட்டூர் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்த காரணத்தால் சுமார் 300 தென்னை மரங்கள் காய்ந்துள்ளது. பாசன வாய்க்கால்களுக்கு வரும் தண்ணீர் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது .இதனால் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கூடுதலாக இன்னும் ஒரு மாதத்திற்கு பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆற்றின் வடகரைப் பகுதியில் கரையை ஒட்டி தண்ணீர் வருவதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். விவசாயத்திற்கு தேவையான இடுபொருட்கள், விதைகளை அரசு குறித்த நேரத்தில் விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும் என வலியுறுத்தினார். கூட்டத்தில் கலந்து கொண்ட தொட்டியம் வட்ட காவிரி நீர் பாசன வாழை வெற்றிலை உற்பத்தியாளர் சங்கத்தினர் கலந்து கொண்டு பேசும்போது தொட்டியம் பகுதியில் ஆண்டு பயிர்களான வாழை, வெற்றிலை மற்றும் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியில் வாழை அதிகம் பயிர் செய்வதால் சித்திரை மாதம் ஏற்படும் சூறைக்காற்றினால் வாழைகள் சேதம் ஏற்படாமல் தடுக்க தைல குச்சியை நட்டு பாதுகாக்க வேண்டும் தைல மரத்தை நடுவதற்கு தண்ணீர் தேவையாக உள்ளது. மேலும் பல இடங்களில் நெல் நடவு தாமதமாக தொடங்கியதால் தற்போது பூட்டு விடும் நிலையில் உள்ளது. அதற்கு இன்னும் ஒரு மாதம் தண்ணீர் தேவையாக உள்ளது. மாயனூர் தடுப்பணை சென்ற ஆண்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று இன்னும் முடியாத நிலையில் இந்த ஆண்டும் தொடர வேண்டி இருப்பதால், அதில் முழுமையாக தண்ணீர் தேக்க இயலாத நிலை உள்ளது. ஆகவே வடகரை வாய்க்கால் தலைப்பில் சென்ற ஆண்டு கொரம்பு அணை அமைத்து கொடுத்தது போல இந்த ஆண்டும் கொரம்பு அமைத்து கொடுத்து குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கும் ஆண்டு பயிர்களை பாதுகாக்க கொரம்பு அணை வடகரை வாய்க்காலுக்கு அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தினர். சங்கத்தின் இணை செயலாளர் மணி குட்டி சுப்பிரமணியன், பேசும்போது பாசன வாய்க்காலின் தலைப்பை சீலை பிள்ளையார் புதூரில் இருந்து மாற்றி மாயனூர் கதவனை அருகே வைக்க வேண்டும் என வலியுறுத்தினர். அப்போது விவசாயிகள் கார்த்திக், காமராஜ், கலைசெல்வன் உள்ளிட்ட பலர் நில அளவைக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கும் பொழுது தாமதம் இன்றி விரைந்து நில அளவை செய்து கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.கூட்டத்தில் அரசு துறை அலுவலர்கள் விவசாய சங்க பிரதிநிதிகள்,விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.