கொரோனோ நோயை தடுக்கும் வகையில் 100 சதவீதம் இலக்கை நிர்ணயம் செய்து தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா தடுப்பூசி மாபெரும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. அதன்படி திருச்சி மாவட்டத்திலும் 382 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்தநிலையில் தடுப்பூசி போடுபவர்களை ஊக்குவிக்கும் வகையில் திருச்சி மாநகராட்சி நிர்வாகம் மற்றும் திருச்சி அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் பரிசுகளை அறிவித்துள்ளது.
அதன்படி மாநகராட்சி பொன்மலை கோட்டத்தில் முதல்பரிசாக 2 பேருக்கு தலா ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள பட்டுசேலை , 2-வது பரிசாக ஒருவருக்கு 6 ஆயிரம் மதிப்புள்ள சைக்கிள், 3-வது பரிசாக ஒருவருக்கு கியாஸ் அடுப்பு, 4-வது பரிசாக 5 பேருக்கு ஓட்டலில் இரவு உணவு பரிசாக அறிவித்துள்ளனர். இதுபோல் கோ-அபிஷேகபுரம் கோட்டத்தில் முதல் பரிசாக ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள், 2-வது பரிசாக ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள், 3-வது பரிசாக ரூ.1000 மதிப்புள்ள பொருட்கள் 25 பேருக்கு வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரியமங்கலம் கோட்டத்தில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள், 3-வது பரிசாக ரூ.1000 மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட உள்ளன.
இதுபோல் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு ஆஸ்பத்திரி முதல்வர் கொரோனா தடுப்பூசி திருவிழா அழைப்பிதழ் என்ற பெயரில் விளம்பர பிரசுரங்களை வெளியிட்டள்ளார். அதில், இன்று கொரோனா தடுப்பூசி போடவருபவர்கள், ஆஸ்பத்திரியில் தரும் கூப்பனை நிரப்பி கொரோனா தடுப்பூசி அதிர்ஷ்ட பெட்டியில் போட்டால், குலுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலி தேர்வு செய்யப்பட்டு அவருக்கு ரத்த அழுத்தமானி பரிசாக வழங்கப்படும். கொரோனா தடுப்பூசி அதிக உறுப்பினர்கள் செலுத்திக்கொள்ளும் சமூக நல அமைப்புக்கு பரிசுக்கோப்பையும், முதல் 50 நபர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.