க்ரியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அமைதிக் குழு மன்றம் தொடக்கம்
திருச்சி நாகமங்கலம் க்ரியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அமைதிக் குழு மன்றம் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியர் கி.சதீஷ் குமார் பங்கேற்று தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். “அன்பும் அறமும் பண்பெனக் கொள்” என்னும் தலைப்பில்உரையாற்றினார். இன்றைய மாணவர்களின் உலகம் அமைதியற்று உள்ளது. அவர்களின் அகமும் புறமும் பாழ்பட்டுள்ளது. வீட்டைவிட்டு வெளியில் வந்து விளையாடாத மனிதர்களோடு பேசாத உயிர்களுடன் உறவாடாத தலைமுறைகளை உருவாக்கியுள்ளோம்.
திறன்பேசிகளின் அடிமைகளாக வளரும் குழந்தைகள் உருவாகி வருவது பெரும் சமூகக்கேடுகளை உருவாக்கிடும். அவற்றில் இருந்து விடுபட்டு நல்ல சூழலில் வளர வாய்ப்புகளை மாணவர்களுக்கு உருவாக்கிட வேண்டும். நூல் வாசித்தல், இயற்கையைப் பேணல், உயிர்களிடத்தில் அன்பு செலுத்துதல், கருணை, சகிப்புத் தன்மை, நல்லறம், நன்னெறி, உள்ளிட்ட நற்பண்புகளின் உரைவிடமாக மாணவர்களை உருவாக்குதலே அமைதிக் குழு மன்றத்தின் இலக்காக இருக்க வேண்டும். இப்பண்புகளே ஆக்கமான நற்சமூகத்தை உருவாக்கும் காரணிகளாய் அமையும் என்றார்.
முன்னதாக பள்ளியின் தாளாளர் டைபூட்டியஸ் மற்றும் மார்கரெட் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பள்ளியின் முதல்வர் .கிறிஸ்டி சுபத்ரா மற்றும் பள்ளியின் நிருவாகிஜானி ஆகியோர் அமைதிக் குழு மன்றத்தின் நோக்கத்தை நோக்கவுரையாக வழங்கினர். மாணவர்களின் பேச்சு, கலைநிகழ்வுகள் நடைபெற்றது.