கத்தியைக் காட்டி பணம் பறித்த ரவுடிகள் மீது பாய்ந்தது குண்டாஸ்
திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன், இ.கா.ப., திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், பொதுமக்களை கத்தியை காண்பித்த பணம்பறிப்பு சம்பவங்கள் ஈடுபடும் ரவுடிகளை கட்டுப்படுத்தவும், வாகன தணிக்கை செய்து குற்றவாளிகளை கண்டறிந்து, குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள காவல்அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்.
கடந்த 22.04.22-ந்தேதி உறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலைரோட்டில் மாநகர பேருந்துக்காக காத்திருந்திருந்தவரிடம் கத்தியை காண்பித்து மிரட்டி ரூ.1520/- பணம் பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து, வழக்கில் சம்பந்தபட்ட எதிரி மணிகண்டன் வயது 22. த.பெ.பிரகாஷ் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணையில் எதிரி மணிகண்டன் பொது இடத்தில் விளையாடிக்கொண்டிருந்து இளைஞர்களிடம் தகராறு செய்து கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்த வழக்கும், அடிதடி மற்றும் பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கொள்ளையடித்த வழக்கு உட்பட 10 வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
கடந்த 03.05-22-ந்தேதி கண்டோன்மெண்ட் காவல் நிலைய எல்லைக்குப்பட்ட வ.உ.சி தெருவில் நடந்து சென்ற ஒருவரிடம் கத்தியை காண்பித்து ரூ.950/- பணம் பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து, வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரி ஹேமேஷ்வரன் வயது 21 த.பெ.கணேசமூர்த்தி என்வரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணையில் எதிரி ஹேமேஷ்வரன் ஜெராக்ஸ் கடை உரிமையாளரிடம் பணம் கேட்டு கத்தியை காட்டி கொலை மிரட்டி விடுத்த வழக்கு, குடிபோதையில் நண்பரை கத்தியால் குத்திய வழக்கு, பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் அரிவாளால் தாக்கிய வழக்கு உட்பட 6 வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
எதிரிகள் மணிகண்டன் மற்றும் ஹேமேஷ்வரன் ஆகியோர்கள் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதும், பொதுமக்களிடம் ஆயுதங்களை காட்டி அச்சுறுத்தி அடிதடி மற்றும் பணபறிப்பு சம்பவங்களில் ஈடுபடுவதாக விசாரணையில் தெரிய வருவதால், மேற்கண்ட எதிரிகளின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன், இ.கா.ப, மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிகளுக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்தும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.