திருச்சி அருகே 2 குட்டிகளுடன் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் – அச்சத்தில் ஊர் பொதுமக்கள்!
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உப்பிலியாபுரம் அடுத்த ஆங்கியம் கிராமத்தில் சிறுத்தை ஒன்று சில நாட்களுக்கு முன் இருவரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.வனத்துறையினரின் டிராப் கேமரா மூலம் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டு,உருவ அமைப்பின்படி அது ஆண்சிறுத்தை எனவும், கேமரா பதிவுகளின்படி , சிறுத்தை ஆங்கியம் காட்டிலிருந்து வெளியேறி கொல்லிமலை வனப்பகுதியில் நுழைந்து விட்டதாக வனத்துறை அறிவித்ததையடுத்து. ஆங்கியம் பொது மக்கள் நிம்மதியடைந்தனர்.
சிறுத்தையின் கால்தடங்களை பரிசோனைக்குட்படுத்திய பொழுது, அது பெண் சிறுத்தை என தெரியவந்தது,கடந்த சில தினங்களாக,இரவு வேளைகளிலும், வயல்வெளிகளிலும் சிறுத்தையின் உறுமல் சத்தம் கேட்பதாக ஆங்கியம் பொதுமக்கள் புகார் எழுப்பினர்.

நேற்று காலை 10 மணியளவில் ஆங்கியத்தை 14 வயது சிறுமி கமலி,இவர் தோட்டத்தில் வேலை பார்க்கும் தனது தாத்தாவிற்க்கு சாப்பாடு எடுத்துச்சென்று கொடுத்து விட்டு திரும்பும் வழியில், சிறுத்தை உறுமலோடு குறுக்கே ஓடியதை கண்டு ,செய்வதறியாது திகைத்து நின்றார். சிறிது நேரம் கழித்து தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு ஊரில் வந்த பின் பெரியவர்களிடம் சொன்னதன் பேரில், ஊர் மக்கள் விபரீதத்தை புரிந்து கொண்டு அழகாபுரி கிராம நிர்வாக அலுவலர் இளவரசன் வனத்துறையினருக்கு தகவல் அளித்தார்.
இது தவிர ஐடிஐ மாணவர் உதயன் என்பவர் அதே பகுதியில் இன்று இரண்டு சிறுத்தை குட்டிகளை பார்த்துள்ளார். அந்த சிறுத்தை குட்டிகள் அங்குமிங்கும் ஓடி விளையாடியதை உதயன் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து உதயம் கிராம முக்கியஸ்தர்களிடம் தகவல் அளித்துள்ளார். இதன்மூலம் பெண் சிறுத்தை குட்டிகளுடன் காட்டு பகுதியில் முகாமிட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள ஆங்கியம் பொதுமக்கள் இதனால் அச்சத்திலுள்ளனர். கூலி வேலையை நம்பியுள்ள தொழிலாளிகள், ஆடு, மாடுகளை வாழ்வாதாரமாக கொண்ட பொது மக்கள், விவசாயிகள் ஆகியோர் தோட்ட பகுதிகளுக்கு செல்ல அச்சமடைந்துள்ளதாகவும், சிறுவர்கள், குழந்தைகள் உயிர் பயத்துடன் உள்ளதாகவும், வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க கோரிக்கை வைத்துள்ளனர். கூண்டு வைத்து சிறுத்தையை பிடித்தாள் குட்டிகள் இழக்க கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் இதை எவ்வாறு கையாளுவது என்பது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுடன் அந்த கிராமத்தில் முகாமிட்டுள்ள திருச்சி வனத்துறை அலுவலர்கள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். சிறுத்தையின் நடமாட்டத்தை அறிய இன்று வனத்துறையினர் டிராப் கேமரா பொருத்தியுள்ளனர். மீண்டும் குட்டிகளுடன் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதால் கிராம மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறியhttps://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo