திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவாசியில் உள்ள திருச்சி,சேலம் நெடுஞ்சாலையில் லாரியும், ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து – 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி – எஸ்பி சுஜித் குமார் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து கும்பகோணத்திற்கு கோவிலுக்கு செல்வதற்காக திருச்சி வழியாக ஆம்னி வேனில் குழந்தை உள்பட 9 பேர் பயணம் செய்தனர்.
இதே போல் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா சின்ன வளையம் வடக்கு தெருவை சேர்ந்த 43 வயதான செந்தில்குமார் மரக்கட்டைகளை லாரியில் ஏற்றிக் கொண்டு திருச்சியில் இருந்து கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் மண்ணச்சநல்லூர் அருகே திருவாசியில் உள்ள திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் எடப்பாடியில் இருந்து வந்த ஆம்னி வேணும், லோடு ஏற்றி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் சேலம் மாவட்டம் எடப்பாடி நெடுங்குளத்தைச் சேர்ந்த 32 வயதான முருகன், 9 வயதான தாவானா ஸ்ரீ, 57 வயதான ஆனந்தாயி, முத்துசாமி உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த வாத்தலை போலீசார் விபத்தில் படுகாயமடைந்த 36 வயதான சசிகலா 28 வயதான சகுந்தலா உள்ளிட்ட 3 பேரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர்களின் 6 பேர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து நடந்த இடத்தில் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் நேரில் சென்று விபத்து குறித்து ஆய்வு செய்தார்.

இந்த விபத்தினால் திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது காவலர்கள் அப்பகுதியில் போக்குவரத்தை சரி செய்யும் பணியிலும் ஈடுபட்டனர். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் செந்தில்குமாரை வாத்தலை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.