ராங்காலில் மலர்ந்த காதல்; பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி போலீசாரிடம் தஞ்சம்
திருச்சி மாவட்டம், முசிறியை அடுத்த சூரம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் விஜயராஜ்(வயது 27). பெயிண்டரான இவருக்கும், தர்மபுரி மாவட்டம், அதிகாரிப்பட்டியை சேர்ந்த குப்புசாமி மகள் சந்தியாவுக்கும்(வயது 20) ராங்க கால் மூலம் நட்பு ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மறியது. இருவரும் இரண்டு வருடமாக காதலித்து வந்தநிலையில் இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிந்த நிலையில் இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து இவர்கள் 2 பேரும் கடந்த 26ந் தேதி வீட்டைவிட்டு வெளியேறி நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் விஜயராஜ் சூரம்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு சந்தியாவை அழைத்து சென்றார்.
இந்த நிலையில் சந்தியாவின் பெற்றோர் தனது மகளைக் காணவில்லை என்று பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இந்நிலையில் சந்தியா தனது காதல் கணவருடன் தங்களது பெற்றோரிடமிருந்து பாதுகாப்பு கோரி முசிறி காவல் நிலையத்தில் வந்து தஞ்சம் அடைந்தனர்.
திருமணம் செய்த காதல் ஜோடி கொடுத்த புகாரின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் முத்தையன் இருதரப்பு பெற்றோரையும் வரவைத்து விசாரணை மேற்கொண்டார். பின்னர் கணவன், மனைவி 2 பேரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.