காதல் திருமண ஜோடி காவல்நிலையத்தில் தஞ்சம்
திருச்சி சமயபுரம்அருகே சிறுகனூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் திருமண ஜோடி போலீசில் தஞ்சமடைந்தனர்.
மண்ணச்சநல்லூர் அருகே கன்னியாகுடி கீழத்தெருவை சேர்ந்த சரவணனின் மகன் குமரேசன்(24). இவருக்கும் திருச்சி சிந்தாமணி புதுத்தெருவை சேர்ந்த கணேசனின் மகள் ஹர்ஷவர்த்தினி(23) இவர்களுக்கு இடையே கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட நட்பு, பின்னர் காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து நேற்று அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், தங்கள் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று நினைத்து, பாதுகாப்பு கேட்டு நேற்று சிறுகனூர் காவல் நிலையத்தில் அவர்கள் தஞ்சமடைந்தனர். இதைத்தொடர்ந்து அவர்களுடைய பெற்றோரை போலீசார் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஹர்ஷவர்த்தினி, காதல் கணவருடன் தான் செல்வேன் என்று கூறியதையடுத்து, அவரை அவரது கணவருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.