மழை காலங்களில் மின்விபத்துகளை தடுக்கும் வழிமுறைகள்

0 415
Stalin trichy visit

மழை காலங்களில் மின்விபத்துகளை தடுக்க பொதுமக்கள் கீழ்கண்ட பாதுகாப்பு அறிவுரைகளை பின்பற்றுமாறு திருச்சி மின் ஆய்வாளர் ஆர்.சிவக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
1)காற்று மற்றும் மழைக்காலங்களில் மின்கம்பங்கள், மின்மாற்றிகள், மின்பகிர்வு பெட்டிகள் மற்றும் ஸ்டே கம்பிகள் அருகே செல்லக்கூடாது.
2)மின்கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் செல்வதோ அதனை தொட முயற்சிப்பதோ கூடாது. அதுகுறித்து அருகிலுள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிப்பதோடு மின்வாரிய அலுவலர்கள் வரும் வரை வேறு யாரேனும் அந்த மின்கம்பிகளை தொடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

3)இடி, மின்னலின்போது வெட்ட வெளியிலோ, மரங்களின் அடியிலோ, மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் அடியிலோ தஞ்சம் புகாதீர்கள். காங்கிரீட் கூரையிலான கட்டிடங்களில் தஞ்சமடையுங்கள். பாதுகாப்பான கட்டிடங்கள் இல்லாத பட்சத்தில் தாழ்வான பகுதியில் தஞ்சமடையுங்கள்.
4)இடி, மின்னலின்போது டி.வி., மிக்ஸி, கிரைண்டர், கணினி, செல்போன், தொலைபேசியை பயன்படுத்தக்கூடாது. திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்கக்கூடாது.

5)மின்மாற்றிகள், மின்பகிர்வு பெட்டிகள் மற்றும் மின்கம்பங்கள் அருகே தண்ணீர் தேங்கியிருக்கும்போது அதன் அருகே செல்லக்கூடாது.
6)மின்கம்பத்திற்கு போடப்பட்டுள்ள ஸ்டே வயர்களில் ஆடு, மாடுகளை கட்டுவதோ, மின்கம்பிகளுக்கு அடியில் கால்நடைகளை கிடை அமர்த்துவதோ, மின்கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்தப்படுவதோ, மின்கம்பங்கள், ஸ்டே வயர்கள், மற்றும் சர்வீஸ் பைப்புகளில் கொடிகள் கட்டி துணிகளை காயப்போடுவதோ கூடாது.
7)வீடுகள், மின்கம்பங்கள், மற்றும் மின்மாற்றிகளில் ஏற்படும் மின்பழுதுகளை பொதுமக்கள் தாமாக சரிசெய்ய முயற்சிக்க கூடாது. மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

8)மின் நுகர்வோர் இருப்பிடத்தில் ஏற்படும் மின்விபத்துகளை தவிர்க்க அனைத்து கட்டிடங்களிலும் மின்கசிவு தடுப்பான் கருவியை மின் இணைப்பிற்கான சர்வீஸ் மெயின் அருகில் பொருத்த வேண்டும். மின்கசிவு தடுப்பான் கருவியானது பழுதான மின்சாதனங்களை இயக்கும் போது ஏற்படும் மின் கசிவினை கண்டறிந்து மின் வினியோகத்தை உடனடியாக நிறுத்தி மின் விபத்துகளை தவிர்த்திட ஏதுவாக இருக்கும்.

9)கேபிள் டி.வி. வயர்களை மின்கம்பங்களில் கட்டுவதோ, மின்கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்லவோ கூடாது. பச்சை மரங்களிலும், இரும்பு கிரில்களிலும் அலங்கார சீரியல் விளக்குகள் கட்டுவதை தவிர்க்க வேண்டும்.
10)விவசாய நிலங்களில் மின்சார வேலி அமைப்பது சட்டப்படி குற்றமான செயலாகும். மேலும் மின்சார வேலி அமைப்பதனால் மனிதர்களும், கால்நடைகளும் மின்விபத்தினால் உயிரிழக்க நேரிடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.