திருச்சி மாவட்டம் கோரையாற்றில் ஏற்பட்டுள்ள காட்டாற்று வெள்ளம் குடமுருட்டி ஆற்றில் சென்று காவிரியில் கலக்கிறது. எனவே, கோரையாற்று வெள்ளம் வடிய ஏதுவாக முக்கொம்பு மேலணையில் இருந்து கல்லணை நோக்கி செல்லும் காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
அதே வேளையில் முக்கொம்பு மேலணையில் இருந்து பிரியும் கொள்ளிடம் ஆற்றில் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த 8-ந் தேதி மாலை முதல் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் உபரியாக வெளியேறியது. நேற்று காலை அதிகரித்து வினாடிக்கு 17,393 கன அடிவீதம் வெளியேற்றப்பட்டது.
இதற்கிடையே சேலம் மாவட்டம் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி விடும் நிலையில், நேற்று முன்தினம் வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் அன்று நள்ளிரவு கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையை வந்தடைந்தது.
மேலும் பவானிசாகர் அணை நிரம்பி அங்கிருந்து சுமார் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடிவீதமும், அமராவதி அணையில் இருந்து சுமார் 2,500 கன அடிவீதமும் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாயனூர் கதவணையில் இருந்து வந்த தண்ணீர் நேற்று மாலை 4 மணிக்கு முக்கொம்பு மேலணைக்கு வந்தது. தண்ணீர் அளவு வினாடிக்கு 22,453 கன அடியாக உயர்ந்தது. அந்த தண்ணீர் அப்படியே கொள்ளிடம் ஆற்றில் உபரியாக திறந்து விடப்படுட்டது.
பின்னர் படிப்படியாக தண்ணீர் வரத்து அதிகரித்து, இரவு 10 மணியளவில் முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 35 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. முக்கொம்பில் இருந்து கல்லணை நோக்கி செல்லும் காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு முழுமையாக நிறுத்தப்பட்டதால், 35 ஆயிரம் கன அடி தண்ணீரும் உபரியாக கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்பட்டது.
இந்த நிலையில் கொள்ளிடம் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கலெக்டர் எஸ்.சிவராசு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கும் இடவசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கால்நடைகளையும் பாதுகாப்பான இடங்களில் கட்டி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் மழை பாதிப்புகளை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பொதுமக்கள் தொடர்பு கொள்ளும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், மேலும் 93840-56213 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்பலாம். அத்துடன் மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள தாசில்தார்களை தொடர்பு கொண்டும், டி.என்.ஸ்மார்ட் என்ற செயலி மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம் என கலெக்டர் எஸ்.சிவராசு கேட்டுக்கொண்டுள்ளார்.