ரம்மியால் இழந்த பணம்… வாலிபர் ஆனார் பிணம்…

மார்ச்.27 திருச்சி. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த அஞ்சல்காரன்பட்டியைச் சேர்ந்த வில்சன் (26) ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் வீட்டிலேயே துாக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
கடந்த சில வருடங்களாக ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பணத்தை இழப்பதோடு, தற்கொலை செய்து கொள்வதால் தமிழ்நாட்டில் ஏராளமான குடும்பங்கள் இந்த விளையாட்டால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டு பண இழப்பை ஏற்படுத்துவதோடு, உயிரையும் காவு வாங்குகிறது. இதனால் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை தடைசெய்ய வேண்டும் என்று ஒட்டுமொத்தமாக அனைவரும் குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஆளுநர் ரவி, சுமார் 4 மாதங்களாகியும் மசோதாவை கிடப்பில் போட்டு, தமிழ்நாடு சட்டசபைக்கே திருப்பி அனுப்பினார்.


click the image to chat on whatsapp
அதேபோல, ஆன்லைன் சூதாட்ட தடைசட்ட மசோதாவை நிறைவேற்ற மாநில அரசுக்கு எந்தவித அதிகாரமும் இல்லையென்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருந்தார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு சட்டசபையில் மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மத்திய அரசு தரப்பில், ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் கொண்டு வர மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்றும் விளக்கம் அளித்திருந்த நிலையில், திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த அஞ்சல்காரன்பட்டியைச் சேர்ந்த 26 வயது கூலித்தொழிலாளி வில்சன் என்பவர் தனது வீட்டில் தனியாக இருந்தபோது, துாக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். 4 லட்சம் கடன் வாங்கி ரம்மி விளையாட்டில் தோற்ற வில்சன், வாங்கிய கடனை அடைக்க முடியாமலும், தந்தையின் கண்டிப்பின் காரணமாகவும் தற்கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இச்செய்தி அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு முன்னர், கடந்த 2020 ஆம் ஆண்டு வாத்தலை காவலர் சந்தோஷ் என்பவரும், 2022 ஆம் ஆண்டில் மணப்பாறை கல்லுாரி மாணவன் சந்தோஷ் என்பவர் ரயில் முன் பாய்ந்தும் தற்கொலை செய்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் துவாக்குடி துப்பாக்கி தொழிற்சாலையில் மருத்துவ ஊழியராக பணிபுரியும் ரவிசங்கர் என்பவரைத் தொடர்ந்து இன்று வில்சன் இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தையும், தனது உயிரையும் இழந்து விட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இனியும் இந்த விளையாட்டால் மனிதர்கள் யாரும் தன் இன்னுயிரை மாய்த்து விடக்கூடாதென்றும் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.