சிறுமியை அடித்துக் கொன்ற தாய், காதலருக்கு ஆயுள் தண்டனை
தவறான உறவுக்குத் தடையாக இருந்த 5 வயதுச் சிறுமியை அடித்துக் கொன்ற தாய் மற்றும் அவரது காதலருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
திருச்சி,நவ.30 திண்டுக்கல் மாவட்டம், சிறுகனுாா் பழையாறு பகுதியில் உணவகம் நடத்தி வந்த பிரசன்னபாபுவுக்கும், திண்டுக்கல்லை சோ்ந்த நித்யகமலாவுக்கும் (38) கடந்த 2010 இல் திருமணம் நடைபெற்று, லக்சிகா (5) என்ற பெண் குழந்தை இருந்தாா்.
இந்நிலையில் நித்யகமலாவுக்கு திண்டுக்கல் தனியாா் கல்லூரியில் கணினி ஆசிரியா் பணி கிடைக்கவே, மகளுடன் தாய் வீட்டில் இருந்தபடி அவா் வேலைக்குச் சென்று வந்த நிலையில் அதே கல்லூரியின் உடற்பயிற்சி ஆசிரியரான திண்டுக்கல் முத்துப்பாண்டியுடன் (42) அவருக்குத் தொடா்பு ஏற்பட்டது.
இதையறிந்த பிரசன்னபாபு மனைவியுடன் தகராறு செய்து, விவாகரத்து வழக்குத் தொடா்ந்தாா். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்பேரில் நித்யகமலா, மகளுடன் நிரந்தரமாக தாய் வீட்டிலேயே தங்கிவிட்டாா். இதனால் முத்துப்பாண்டியுடன் தகாத உறவும் தொடா்ந்தது.
பின்னா் திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூா் நேதாஜி தெரு வாடகை வீட்டில் இருவரும் வசித்த நிலையில் தங்களுக்கு சிறுமி லக்சிகா இடையூறாக இருப்பதாகக் கருதிய அவா்கள் கடந்த 2019 மே 19 ஆம் தேதி சோ்ந்து தாக்கியதில் பலத்த காயமடைந்த சிறுமி மருத்துவமனைகளில் சோ்க்கப்பட்டு, சிகிச்சைப் பலன்றி உயிரிழந்தாா்.
தகவலறிந்த காட்டுப்புத்துாா் போலீஸாா் வழக்குப் பதிந்து சிறுமியின் தாயிடம் நடத்திய விசாரணையில் சிறுமி கொல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து நித்யகமலாவையும், முத்துப்பாண்டியையும் கைது செய்த போலீஸாா் திருச்சி மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செல்வமுத்துக்குமாரி சிறுமியை அடித்துக் கொன்ற இருவருக்கும் ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து, அதைக் கட்டத் தவறினால் மேலும் 3 மாத சிறைத் தண்டனை விதித்தும் தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் கூடுதல் அரசு வழக்குரைஞா் சக்திவேல் ஆஜரானாா்