வரதட்சணை கேட்டு புதுப்பெண்ணுக்கு தொல்லை : கணவர் குடும்பத்தினர் மீது வழக்கு
திருச்சி, மே 8 திருச்சி அருகே உள்ள பி.ஹெச்.இ.எல் டவுன்ஷிப் பகுதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (37). இவருக்கும் வையம்பட்டியைச் சேர்ந்த நிவேதா (32) என்பவருக்கும் கடந்த ஆண்டு முறைப்படி இரண்டாவது திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்குப் பிறகு இருவரும் கணவர் வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர்.
இந்த நிலையில், சிலம்பரசன் மற்றும் அவரது குடும்பத்தினர் நிவேதாவிடம் கூடுதல் வரதட்சணையாக ரூ. 5 லட்சம் ரொக்கப்பணம், 50 சவரன் தங்க நகைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களைக் கேட்டுத் தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில், கணவர் சிலம்பரசன் தனது குடும்பத்தினரின் தூண்டுதலின் பேரில் நிவேதாவை ஆபாசமாகத் திட்டி, கைகளாலும் கால்களாலும் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த நிவேதா திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பினார். இது குறித்த புகாரின் பேரில், திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கணவர் சிலம்பரசன், மாமியார் மணிமேகலை, மாமனார் ராமசாமி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.