ஆறுதல் சொல்லி தேற்றக்கூடிய இழப்பு இல்லை இது. மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை சகாவுமான ஆருயிர் இளவல் என்.ஆர்.இளங்கோவின் அன்பு மகன் ராகேஷ் சாலை விபத்தில் உயிர் இழந்தார் என்ற அதிர்ச்சிகரமான செய்தி காலையில் இடியாய் செவியில் விழுந்தது.
எனக்கு நன்கு தெரியும் அந்த செல்வனை! அறிவுக் கூர்மையும், துடிப்பும் அடக்கமும் ஒரு சேரப் பெற்ற நல்ல பிள்ளை! அவர் தந்தையைப் போலவே புகழ் மிக்க வழக்கறிஞராக பிரகாசிக்கக் கூடியவர் என்பதை பல நேரங்களில் பேச நேர்ந்தபோது உணர்ந்திருக்கிறேன். போக வேண்டிய வயதா இது? எத்தனை கனவுகள் அவருக்கும், அவரைப் பெற்றவர்களுக்கும் இருந்திருக்கும். எல்லாம் அவர் பயணம் செய்த வாகனத்தைப் போலவே தூள் தூளாகி விட்டனவே!
ஏன் இப்படி நடந்தது என்று இப்போது பேசுவதில் பயனேதும் இல்லை. மிக கொடும் குணம் கொண்டவருக்குக் கூட நடக்கக்கூடாத இந்த நிகழ்வு, பொருளும் பலனும் கருதாமல் எல்லோர்க்கும் உதவும் குணம் கொண்ட என்.ஆர்.இளங்கோவுக்கா? எனக்கு கவலையெல்லாம் அவரும், அவர் மனைவியும் எப்படி இதை தாங்கிக் கொள்ளப் போகிறார்கள் என்பதுதான். வார்த்தைகள் இல்லை தேற்றுவதற்கு! இளங்கோ மனம் துவளாமல் இருக்கும் வகையில் பக்கம் நின்று பலம் தருவதைத்தவிர! என திருச்சி சிவா உருக்கம் தெரிவித்துள்ளார்.