திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள புதுக்காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராமானுஜத்தம்மாள் (வயது 67). இவர் தினசரி அதிகாலையில் வாக்கிங் செல்வது வழக்கம். அதேபோல் இன்று காலை வீட்டில் இருந்து புறப்பட்டு வாக்கிங் சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். வீட்டிற்கு சற்று முன்னதாக வந்தபோது அங்கு மறைவிடத்தில் இருந்து ஓடி வந்த 30 வயது மதிக்கத்தக்க மர்மநபர் மூதாட்டியின் வாயை பொத்திக் கொண்டு அவள் கழுத்தில்
அணிந்திருந்த 6 சவரன் தாலி செயினை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். செய்வதறியாது தவித்த மூதாட்டி பின்னர் வீட்டுக்கு சென்று கணவர் வீரய்யாவிடம் சம்பவம் குறித்து கூறியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மர்ம நபர் முகத்தை மறைக்கும் மங்கி குல்லா அணிந்து வந்ததாக மூதாட்டி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர். அதிகாலை நேரத்தில் வாக்கிங் சென்ற மூதாட்டியிடம் செயின் பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.