திருச்சி ரெயில்வே ஜங்ஷன் கல்லுக்குழி நுழைவுவாயில் திறப்பு
திருச்சி ரெயில்வே ஜங்ஷனுக்கு செல்ல பாரதியார் சாலையில் பிரதான நுழைவு வாயிலும், ரெயில்வே ஜங்ஷன் பின்புறமுள்ள கல்லுக்குழி பகுதியில் 2-வது நுழைவாயில் உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் பயணிகள் நடைமேடை கட்டணமும் பல மடங்கு உயர்த்தப்பட்டது. சரக்கு ரயில் போக்குவரத்து மட்டுமே செயல்பட்டு வந்தது. இதன் காரணமாக தேவையில்லாத நபர்கள் ரெயில் நிலையத்துக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தின் இரண்டாவது நுழைவு பாதையான கல்லுக்குழி நுழைவாயில் மூடப்பட்டது.
அதன் பிறகு கொரோனா ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் படிப்படியாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் கிட்டத்தட்ட ஓராண்டுக்கு பிறகு திருச்சி ரெயில்வே ஜங்ஷன் கல்லுக்குழி நுழைவுவாயில் சமீபத்தில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அங்கு பயணிகள் டிக்கெட் கவுன்ட்டர்களும் செயல்பட தொடங்கியுள்ளது. இதுதவிர பயணிகளின் உடமைகளை சோதனை செய்ய ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் ஸ்கேனர் கருவியும் வைக்கப்பட்டு உள்ளது.